(ந.தனுஜா)

தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு முகங்கொடுப்பதில் இலங்கையுடன் ஒருமித்து நிற்பதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரிடம் உறுதியளித்தார்.

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே இன்றைய தினம் அலரிமாளிகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் பிரவேசம் இடம்பெற்று 50 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் இடம்பெற்றதுடன், அதற்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது கடந்த 2014 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் வைத்து இடம்பெற்ற உரையாடலை நினைவுகூர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷ, கடந்த பெப்ரவரி மாதம் தான் மேற்கொண்டிருந்த இந்திய விஜயம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அவரைத் தொடர்ந்து இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேலும் விரிவாக்குவதற்கான செயற்திட்டத்தைத் தான் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் பாக்லே கூறியதுடன், தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு முகங்கொடுப்பதில் இலங்கையுடன் ஒருமித்து நிற்பதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும்  தெரிவித்தார்.

மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான நெடுங்கால நட்புறவை நினைவுகூர்ந்த பிரதமர், புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு இலங்கை மற்றும் இந்தியா கொண்டிருக்கும் பௌத்தமத ரீதியான தொடர்புகள் இருநாட்டு மக்கள் மத்தியிலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.