இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி கேள்வியுற்று அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையுமுற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மலையக மக்களின் உரிமைக்குரலாக ஒலித்த பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பேரனான ஆறுமுகன் தொண்டமான் பாட்டனாரின்  மறைவுக்குப் பின் அக்கட்சியின் தனிப்பெரும் தலைவராகவும் மலையக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மிளிர்ந்தவர்.    

எனது வன்னி மாவட்டத்தில் யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்காக அன்னாரை நான் அணுகியபொழுது கொங்கிறீட் சட்டக வீடுகளை நிரமாணிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளை செய்து தந்ததுடன் எமது மக்களுக்கான எந்தவொரு தேவையை நான் முன் வைத்தபோதும் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செய்து தந்த ஒரு  சிறந்த நண்பனாக அவர் திகழ்ந்தார்.

அவரது இழப்பு இந்த நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், கட்சியினர்  மலையகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும், வன்னி மாவட்ட மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.