நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார் தொண்டமான் என சிறிரெலோ செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார்.

தொண்டமானின் மறைவுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களின் வாழ்வுரிமையையும் அரசியல் அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்த மாமனிதர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் பேரனாக அவரது பொறுப்புக்களை சுமந்து மலையகத்தின் மிடுக்காக வலம் வந்த ஒரு அரசியல் ஆழுமையான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பின்மூலம் மலையகத்தின் மிடுக்கே இன்று மாரணித்துப்போயுள்ளது.

1990களில் அரசியலில் கால்பதித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் ஊடாக 1994 ம் ஆண்டுமுதல் 26 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல தடவைகள் அமைச்சுப் பதவிகளையும் பெற்று தன்னைச்சார்ந்த மக்களுக்காக உழைத்த ஒரு தலைவரை இழந்து வெறுமை உணர்வுடன் கலங்கிநிற்கும் மலையக உறவுகளின் துயரில் நானும் உங்களில் ஒருவனாக பங்கெடுக்கின்றேன்.

யாருக்கும் அஞ்சாத தற்துணிவும், மனதில் பட்டதை பேசும் நேர்மையும், கம்பீர தோற்றமும், அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்புறவும் அவரது தனித்தன்மாயாக விளங்கியதுடன் அதுவே மலையக மக்களின் தன்னம்பிக்கையாகவும் அமைந்தது.

மலையக அரசியலில் பல புதியவர்களின் வருகையினால் சாவாலுக்குட்படுத்தப்பட்ட தொழிலாளர் காங்கிரஸின் இருப்பை தக்க வைப்பதற்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரையும் அவர் வளர்த்த கட்சியையும் காப்பாற்றுவதற்காகவும் தன்னை அற்பணித்து தனது உடல்நலனைக்கூட கவனத்தில் கொள்ளாது உழைத்ததன் விளைவாக வாழ்க்கைப் பயணத்தை பாதிவழியிலேயே இடைநிறுத்தி, இட்டுநிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார்.

தாயை இழந்த பிள்ளைகள் போல் தம் தலைவனை இழந்து செய்வதறியாது தவித்துப்போயுள்ள மலையக தமிழ் உறவுகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி உறவுகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனதும் எனது கட்சியினதும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு உங்களில் ஒருவனாக உங்களது துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.