(ஆர்.ராம்)

அண்மைய நாட்களாக காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு தரப்பினரும் சில குடாநாட்டு ஊடகங்களும் இணைந்து என்னைப் பற்றி புனைகதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். 

அவை எந்தவிதமான அடிப்படையற்ற உண்மைக்குப்புறம்பான கருத்துக்களே என்று வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் பதவி ஏற்று சொற்ப நாட்களில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.

அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி, என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட குழுவினர் சில ஊடகங்களின் துணையுடன் உண்மைக்கு புறம்பான முறையிலும் எந்தவிதமான அடிப்படைகள் அற்றவகையிலும் கற்பனையில் செய்திகளை புனைந்து அவற்றை பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இத்தகையவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லாதபோதிலும் தொடர்ச்சியான இப்பொய்யான செயற்பாடுகளால் வடமாகாண நிருவாகச் செயற்பாடுகள் உட்பட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கே விளைகின்றார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.

எனக்களிக்கப்பட்ட பொறுப்பினையும் எனக்குள்ள சமுகத்தன் மீதான பற்றின் அடிப்படையிலும் எனது பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். அவற்றின் வினைத்திறன் பற்றிய மதிப்பீடுகளுக்கு காலமே உரிய பதிலளிக்கும் என்றார்.