இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவியின் பெயர் இந்திய மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘நம்பர்-1’  வாள் வீச்சு (பென்சிங்) வீராங்கனையான பவானி தேவி, தமிழ் நாட்டின் சென்னையைச் சேர்ந்தவராவார். சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று முத்திரை பதித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற  சாட்டிலைட் உலக சம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மேலும், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்காக அவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலா ஜனோடியிடம் சிறப்புப் பயிற்சிகளை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக சென்னை திரும்பிய அவர் வீட்டில் வழக்கமான பயிற்சிகளை மேற்கொண்டார். 4 ஆவது கட்ட ஊரடங்கு தளர்வினால், மீண்டும் நம்பிக்கையுடன் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், அர்ஜூனா விருதுக்கு பவானி தேவியின் பெயரை இந்திய வாள்வீச்சு சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து இந்திய வாள்வீச்சு சம்மேளன பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளதாவது,

“அர்ஜுனா விருதுக்கு பவானி தேவி பெயரை  எமது சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான தகுதி அவருக்கு உள்ளது. இந்த விருது பவானி தேவிக்கு கிடைக்கும் பட்சத்தில் 2024, 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எங்களது உத்தேசத் திட்டத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். அத்துடன் இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் பரவ காரணமாக அமையும்”என்றார்.