இந்திய கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட் லீக்கை தவிர வெளிநாட்டு  கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது போன்று அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியன் பிரிமீயர் லீக், தென் ஆபிரிக்காவில் மேன்சி சுப்பர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சுப்பர் லீக், பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் ஆகிய ரி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெளிநாட்டு ரி20 லீக் தொடர்களிலும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களை பி.சி.சி.ஐ விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரரான ரொபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து உத்தப்பா கூறுகையில், ‘‘இந்திய வீரர்களை,வெளிநாடுகளில் நடைபெற்று வரும் ரி20 லீக் தொடர்களில்  விளையாட அனுமதிக்காவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒன்றிரண்டு லீக்கில் விளையாட அனுமதி அளித்தால் கூட, சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், கிரிக்கெட் குறித்து மேலும் கற்றுக்கொள்ளவதற்றும், வளர்ச்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

இதேவேளை, இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்ஜான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.யிடம் அனுமதி கோரவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

 ‘‘இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் சில லீக்குகளில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். மிகவும் எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் பி.சி.சி.ஐ.யின் அனுமதியை பொருத்துதான் எல்லாம் உள்ளது. அதற்கான நேரம் வரும்போது பி.சி.சி.ஐ.யிடம் பேசுவேன். என்ன நடக்கும் என்பது தற்போது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பி.சி.சி.ஐ.க்கு வேண்டுகோள் விடுப்பேன்’’ என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் வெளிநாட்டு ரி20 கிரிக்கெட் தொடர்களில்  விளையாட அனுமதிக்கப்படவில்லை. யுவராஜ் சிங், விரேந்திர ஷேவாக், சஹீர் கான் ஆகிய இந்திய வீரர்கள் ஐ.பி.எல். உள்ளிட்ட  அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றதால் கனடாவின் குளோபல் டி20 லீக், அபுதாபி ரி 10 போன்ற தொடர்களில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.