கிளிநொச்சி இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்றுமாலை(26.05.2020) கொடிகாமம் புத்தூர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

ஏ-9 வீதியால் கொரோனா சந்தேக நபர்களை எற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் சென்ற டிப்பர் திடீரென திரும்பிய போது அம்பியூலன்ஸ் வாகனத்துடன் மோதியதில், அம்பியூலன்ஸ் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.இதனால் சம்பவ இடத்திற்கு மற்றுமொரு அம்பியூலன்ஸ் வாகனம் வரவளைக்கப்பட்டு அதில் ஏற்றி நோயாளிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குவைத்தில் இருந்து நாடு திரும்பி மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 24 பேரை ஏற்றிச்சென்ற  7 அம்பியூலன்ஸ் வண்டிகளில் நான்கு வண்டிகள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம வைத்தியசாலைக்கு  குறித்த கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை அனுமதிக்க  அழைத்துச் செல்லப்படும்போதே குறித்த விபத்து ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.