(நா.தனுஜா)

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மற்றும் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போது வெளிநாடுகளுடனான தொடர்பில் இருநாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் குறித்து உயர்ஸ்தானிகர் விரிவாகக் கலந்துரையாடினார்.புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு தனது வரவேற்பை வெளிப்படுத்திய அமைச்சர் தினேஷ் குணவர்தன, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பேணுவதில் இலங்கை தொடர்ந்தும் உயர் அக்கறையுடன், பூரண ஒத்துழைப்பை வழங்கி செயற்படுமென உறுதியளித்தார். 

மேலும் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை தனது 'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் பிரகாரம் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக பாக்லே குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் காலத்தில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய  வகையில் இணைந்து செயற்படுவதற்கு இருதரப்பிற்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.