தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் தணிக்கை சான்றிதழ் என்று, இணையத்தில் தணிக்கை சான்றிதழ் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. தளபதி விஜயுடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம், கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியாகவிருந்தது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் இணையதளம் ஒன்றில் வெளியானது. அத்துடன் இப்படம் மூன்று மணி நேரம் இரண்டு நிமிடங்கள் ஓடும் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது. இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் இணையத்தில் இந்த செய்தியை வைரலாக்கினர்.

இதனைத்தொடர்ந்து ‘மாஸ்டர் ’படக்குழுவினர்,'எங்களுடைய 'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை.  சமூக வலைதளங்களில் உலா வரும் தணிக்கை சான்றிதழ் போலியானது. அதற்கு விஜய் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். 'மாஸ்டர்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட பின், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என்று விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து திரையுலகில் விசாரிக்கும்போது, 'மாஸ்டர்: படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்த தகவல் வெளியானால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காக தணிக்கை செய்யப்பட்ட தகவலை படக்குழுவினர் மறைத்து வருவதாகவும் தெரிவித்தனர். வேறு சிலர் இதுவும் ‘மாஸ்டர்’ படம் குறித்த விளம்பர உத்தி என குறிப்பிட்டனர்.