நாடாளாவிய கொரோனா தாக்கம் காரணமாக அமுல் படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் கடமைக்கு சென்றுள்ளனர்.

மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களும் தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக வெளிமாவட்டங்கள் நோக்கி சென்று வருகின்றனர்.

மேலும் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்குட்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் வழமை போல் அரச தனியார் சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் எச்சரிக்கப்படவதோடு, முச்சக்கர வண்டிகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி பயணிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

மேலும் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கண்காணிப்பதற்கு பொலிசார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.