விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள் ...

வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு :

கேள்வி : 1984 ஆம் ஆண்டுகளிலிலேயே நீங்கள் இராணுவத்தில் இணைந்தீர்கள். அது யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியாகும். இவ்வாறானதொரு நிலையில் யுத்தத்தின் இறுதி கட்டம்வரை அதில் பங்கேற்பீர்கள் என்ற எண்ணம் காணப்பட்டதா ?

பதில் : அவ்வாறு ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் இராணுவத்தில் இணைந்தது ஒரு குறிக்கோளுடனேயாகும்.

கேள்வி : மே மாதம் 18 ஆம் திகதி நிலப்பரப்பை கைப்பற்றுகின்றீர்கள் . 19 ஆம் திகதி பிரபாகரனின் உடலை அடையாளம் காண்கின்றீர்கள். இவ்வாறானதொரு வெற்றி இலக்கை எப்போது உணர்ந்தீர்கள். ?

பதில் : இங்கு பொய் செல்வதற்கு ஒன்றும் இல்லை. மன்னாரிலிருந்து 58 ஆவது படையணிக்கு கட்டளையிட்டு முன்னோக்கி நகர்ந்தோம். நிச்சயமாக வெற்றிப்பெற கூடிய போரினையை நாம் முன்னெடுப்பதாக அன்று நான் தெரிவித்திருந்தேன்.  எமது வெற்றி மன்னாரிலிலேயே உறுதிப்பட்டு விட்டது. இந்த காலப்பகுதியில் விடுதலை புலிகளின் நகர்வுகள் குறித்து போதிய அனுபவம் எமக்கிருந்தது. கஜபா படையணியின் தரைப்படையின் அதிகாரி என்ற வகையில் அதனை நன்கு உணர்ந்திருந்தேன்.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி என்ற வகையில் சரத் பொன்சேகா போன்றவர்கள் முழுமையானதொரு வெற்றி இலக்கை நோக்கி போரை நெறிப்படுத்தினார்கள்.  மறுப்பறம் அந்த காலப்பகுதியில் நான் சாதாரண அதிகாரியாகவே இருந்தேன். அப்போதே எனக்கு படையணியொன்று தலைமைத்தாங்குமாறு  இராணுவ தளபதி பாரிய பொறுப்பினை வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும் போரின் வெற்றி மே மாதம் 18 ஆம் திகதி உறுதியானது. 19 ஆம் திகதி பிரபாரகரனின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளரின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்த  இரு படையணிகளின்  இறுதி நடவடிக்கைகளின் போதே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார். இதனை மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவும் அறிவித்தார்.

கேள்வி : யுத்தத்தின் இறுதி கட்டத்தில் எவ்வாறான மனநிலை காணப்பட்டது ?

பதில் : மே 18 ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்தது. 19 ஆம் திகதி பிரபாகரனுடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரிலிருந்தே விருவிருப்பான நிலைமையே காணப்பட்டது. ஒரு விநாடி கூட நித்திரை கொள்வதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. உணவு பிரச்சினை இருக்கவில்லை. 17 ஆம் திகதி இரவு நிச்சயமாக யுத்தத்தை வெற்றி கொள்ள முடியும் என்று உறுதியான நம்பிக்கை இருந்தது.

கேள்வி : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் சோர்வடையவில்லையா ?

பதில் : இல்லை. அப்போது நாம் யுத்தத்தில் பங்கேற்ற போது மீண்டும் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கை எந்த சந்தர்ப்பத்திலும் இருக்கவில்லை. யுத்தத்தில் நாமே முன்னிலை வகித்தோம். அனைத்து அதிகாரிகளும் யுத்த களத்தில் நேரடியாக பங்குபற்றியிருந்தோம். எமது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் நூறு வீதம் காணப்பட்டது. எனது ஒரு செவியின் கேட்கும் புலனை இழந்துள்ளேன்.

மே 17 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களிடம் காணப்பட்ட அனைத்து வெடிபொருட்களையும் இட்டு வாகனமொன்றை நாமிருந்த பகுதிக்கு அனுப்பினர். அவற்றை வெடிக்க வைத்தனர். விடுதலை புலிகளின் சுமார் 1000 வாகனங்கள் இருந்தன. அவை அனைத்தும் தீக்கிரையாகின. அது போன்று நாம் முன்னிருந்து யுத்தத்தில் போராடியிருக்கின்றோம். இறுதி நேரத்தில் வெற்றி பெறு முடியும் என்று நம்பிய போதிலும் சிறு தளர்வும் ஏற்பட்டது.

கேள்வி : பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் போன்றோருடன் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தம் சற்று கடினமானதாக இருந்தததா ?

பதில் : 17 ஆம் திகதி இரவு இடம்பெற்ற யுத்தமே மிகவும் பலம்வாய்ந்ததாக இருந்தது. அன்றை தினம் இரவு புலிகளால் பாதுகாப்பு செயலாளரின் இருப்பிடத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதன் பின்னர் 18 திகதி மாலை வரை நடைபெற்ற யுத்தம் மிகுந்த அபாயமானது. தனது பாதுகாப்புபடையுடன் பிரபாகரனே இறுதி யுத்தத்திலும் பங்கேற்ற வேண்டி ஏற்பட்டது.

தற்கொலை குண்டு தாக்குதல் எமது படை மீது நடத்தப்பட்டன. அவர்களிடம் காணப்பட்ட அனைத்தையும் கொண்டு தாக்கினர். அது போன்ற ஆபத்தான யுத்தமே இறுதி கட்டத்தில் இடம்பெற்றது. அடுத்த 24 மணித்தியாலங்களில் யுத்தம் நிறைவடையப் போகிறது என்று அனைவரும் அறிந்திருந்தாலும் நிறைவுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் பலர் மரணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. யார் மரணிப்பது ? யார் எஞ்சுவது என்ற நிலைமையே காணப்பட்டது. அது இலகுவானதல்ல. படை வீரர் ஒருவருக்கு ஏதேனுமொரு பணிப்புரையை விடுக்கும் போது அது இலகுவானதல்ல என்பது எமக்குத் தெரியும். எனினும் வீரர்கள் யாரும் அதைப் பற்றி கவலையடையவில்லை. அதன் காரணமாகவே இராணுவ வீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று நான் இன்றும் பெரும்பாலான இடங்களில் கூறுவதற்கு காரணமாகும்.

அனைத்து வீரர்களும் சிறந்த மனநிலையில் காணப்பட்டனர். வெற்றி பெற்றுவிட வேண்டும் என்றே இலக்கே காணப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எம்மை தொடர்பு கொண்டு நிலைவரங்களை கேட்டறிந்து கொள்வார். அதே போன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவும் தினமும் எம்மை தொடர்புகொள்வார். பிரிகேடியர் ஒருவரிடம் ஜனாதிபதி இவ்வாறு உரையாடுவது  சாதாரணவிடயமல்ல. இராணுவத்தளபதியும் அவ்வாறே செயற்பட்டார். அவ்வாறு மிகப் பயங்கரமானதொரு யுத்தமாகும். தற்போதைய சந்ததியினருக்கு இதனை கூறினாலும் புரிந்து கொள்ள முடியாது.

கேள்வி : இறுதி கட்டத்தில் கடல் மார்க்கமாகவேனும் எங்காவது தப்பிச் செல்ல வழியுள்ளதா என்று புலிகள் சிந்திக்கவில்லையா ?

பதில் : அவ்வாறு கடல் மார்க்கமாக தப்பிப்பதற்கான வாய்ப்பு இறுதி கட்டத்தில் இல்லாமல் போனது. இறுதி கட்டத்தில் எமது படையினரால் கடற்பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு மூடப்பட்டன.

கேள்வி : ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசம் பிரபாகரனை பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டதே?

பதில் : ஆம். பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு சர்வதேசத்தினால் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அது பற்றி நன்றாகத் தெரியும். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சர்வதேச அழுத்தத்தினால் யுத்தத்தை இடைநிறுத்த வேண்டியேற்படுமா என்று நாம் வினவிய போது அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.

கேள்வி : மே 19 ஆம் திகதி எந்த சந்தர்ப்பத்தில் பிரபாகனுடைய சடலம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்தீர்கள் ?

பதில் : 18 ஆம் திகதி மாலை நாடு மீட்க்கப்பட்டது. அதனை நாம் இராணுவத்தளபதிக்கு அறிவித்தோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அறிவித்ததன் பின்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 19 ஆம் திகதி அனைத்தும் மேற்பார்வை செய்ய சென்ற போது அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெனரல் கமல் குணரத்ன எமக்கு அறிவித்த போது நாம் நேரில் சென்று அதனை பார்வையிட்டோம்.

பிரபாகரனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னரும் அவர் உயிருடன் இருப்பதாகக் கூறினார். சிலர் பிரபாகரன் இறந்ததை நம்ப மறுத்தனர். சில பத்திரிகைகள் கூட இவ்வாறான செய்திகளை வெளியிட்டன. அது முட்டாள் தனமான செயலாகும்.

கேள்வி : இறுதி கட்டத்திலாவது ஏன் அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. அவர் அந்தளவிற்கு ஒரு கோழையா ?

பதில் : அது பற்றி எமக்கு தெரியாது. தெரியாதவை பற்றி கூற முடியாது. கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் பிரபாகரனது சடலமான என்பதை உறுதிப்படுத்துவதற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உறுதிப்படுத்தினர்.

நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்று தான் அப்போது அவரை சடலத்தைப் பார்க்கும் போது தோன்றியது.

கேள்வி : :மீண்டும் எமது தாய் நாட்டில் அவ்வாறானதொரு அமைப்பு தோற்றம் பெறவாய்ப்பு இல்லையா ?

பதில் :எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான வாய்ப்பு இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எனது உயிர் இருக்கும் வரை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை.  

சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல்

(தமிழில் எம்.மனோசித்ரா)