நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்க ப்படுகினறது. 

அதேவேளை மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணிக்கு  ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்டு அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும். 

மேலும் இன்று தொடக்கம் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த, ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதித்தால் நாட்டின் போக்குவரத்தை இன்று முதல் வழமைக்குக்கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கின்றார்.

கடந்த சுமார்  67 நாட்களுக்குப் பின் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இருந்தபோதிலும்  கொரோனாவின் தாக்கத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. தொடர்ந்து சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் முன்வர வேண்டும். இன்றேல் மீண்டும் முழு நாடும் இந்த வைரஸின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும். 

அரசாங்கம் நாட்டினதும் மக்களினதும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி சில விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவனங்களை இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

அதை மனதில் நிறுத்தி அனைத்து நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை ஆரம்பிப்பது  அவசியமாகின்றது.

இதேவேளை, வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு முழுமையாக விடுபடவில்லை எனவும் வயோதிபர்கள்  வெளியில் நடமாடுவதை முடிந்தளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர்  சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே ஊரடங்குச் சட்டம்,  நீக்கப்பட்டதை அடுத்து மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை பொறுத்தே, அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால், அரசாங்கம் மேலும் பல விதிமுறைகளை தளர்த்தி, மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு வழி செய்யும் என்று நம்பலாம்.

இதேவேளை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வழமையான நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலைமைக்கு சென்றுள்ளன. கடந்த 67 நாட்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடந்ததை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

பல்வேறு நிறுவனங்கள் மீண்டும்  தமது முன்னைய நிலைக்கு திரும்பும் வரை தமது ஊழியர்களின் ஊதியத்தில் 50 வீதத்தை மாத்திரம்  வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன .

இதனைக் கருத்தில் கொண்டு  மக்கள் நிலைமையை அனுசரித்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

எனவே மீண்டும்  நாம் முன்னைய நிலைமைக்குத் திரும்ப வேண்டுமானால் அனைத்தையும் பொறுமையாக கையாள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை கூற விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்