மே மாதம் 25ஆம் திகதி உலக தைரொய்ட் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த ஆண்டு மே 25ஆம் திகதி முதல் மே 31ம் திகதி வரை சர்வதேச தைரொய்ட் விழிப்புணர்வு வாரமாக பின்பற்றவேண்டும் என்று உலகமெங்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் தைரொய்ட் பிரச்சனைக்காக மருந்துகளைச் சாப்பிடும் நோயாளிகள், வைத்தியர்களின் ஆலோசனையுடன் அதனை தொடர்ந்து சாப்பிடவேண்டும். ஏனெனில் தைரொய்ட் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், வைரஸ் தொற்றிற்கும் எந்த தொடர்புமில்லை. இருப்பினும் தைரொய்ட் சிக்கல் தொடர்பான பாதிப்புடைய இத்தகைய நோயாளிகள், மற்றவர்களை விட கூடுதலான முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

எம்முடைய உடலின் வளர்சிதைமாற்ற பணிக்கு முக்கியமான சுரப்பிகளான தைரொய்ட் சுரப்பியில், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நரம்பு மண்டலம், மூளை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

தைரொய்ட் குறைபாட்டை தொடக்க நிலையில் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால், அந்நோயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள இயலும். இதில் அலட்சியம் காட்டினால் அதிக அளவிலான கொழுப்பு, குருதி அழுத்தம், இதயக்கோளாறு, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் 30 முதல் 40 சதவீதம் வரை தைரொய்ட் சுரப்பியின்  பாதிப்பிற்கு ஆளாக நேரிடலாம். இதன் பக்க விளைவாக அவர்களுக்கு இரத்தசோகை, கருசிதைவு, குறைப்பிரசவம், பிரசவத்திற்கு பின்னரான அதீத இரத்தப்போக்கு, குளிர் காய்ச்சல், பிரசவத்தின்போது நச்சுக்கொடி எதிர்பாராத நிலைக்கு மாறுவது. போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சிலருக்கு தைரொய்ட் சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தொண்டையில் வலி ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சலும் ஏற்படும். இதனை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. 

இதனை உறுதிப்படுத்திக் கொள்ள அருகிலுள்ள தைரொய்ட் சுரப்பிற்கான சிறப்பு சிகிச்சை நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

டொக்டர் சுமதி.

தொகுப்பு அனுஷா.