இன்றிலிருந்து நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது.

இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத்  தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண  நாட்டு மக்களுக்கு அறிவித்தார் .

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2 மாதங்களுக்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டிருந்த மக்கள் அதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டிருந்தார்களோ தற்பொழுது கொரோனா வைரசு தொற்று தடுப்பிற்கு மத்தியில் அவ்வாறு செயற்பட கூடாதென்றும் அவர் அறிவுறுத்தினார்.

ஊரடங்கு சட்டத்தைப் போன்று கொரோனா தொற்று தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டவகையில் சமூக விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுண்டு.

குற்றவியல் சட்டத்திற்கு சமமான வகையில் இந்த சட்ட விதிகளும் அமைந்திருப்பதாக தெரிவித்த அவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அடையாளங் காணப்பட்டார்.

அதன் பின்னர் 18ஆம் திகதியும் இவ்வாறானோர் அடையாளங் காணப்பட்டனர். புத்தளம், கொச்சிகடை உள்ளிட்ட பொலிஸ் பிரதேசங்களுக்கு ஆரம்பத்தில் தொற்று நோய் தடுப்புக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக நாடு முழுவதிலும் கொரோனா வைரசை தடுப்பதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் நாம் இதற்காக ஈடுபடுத்தவுள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவரை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை சிவில் உடையிலுள்ள பொலிஸார் இவர்களை அடையாளங் காணும் பொழுது அந்த இடத்திற்கு பொலிஸார் விரைவார்கள்.

காணொளி போன்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறானோரை அடையாளங் காண்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்

கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு  சட்டம் நீண்டகாலம் அமுலில் இருந்தது, இருப்பினும் கடந்த 2 வாரக் காலப்பகுதிகளில் நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் செயற்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிகக்கப்படுகின்றது.

ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 65, 000 பேர் கைது செய்யப்பட்டனர். 18 000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.. சுமார் 30, 000 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டதுடன் அதனை மீறி செயல்பட்ட 7000 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக ஜனாதிபதி , பிரதமர், இராணுவ தளபதி, சுகாதார பிரிவினர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர்  மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையின் காரணமாக குறிப்பிடத்தக்க  முன்னேற்றத்தை கண்டுள்ளோம். உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரம் அடைந்துள்ளது.

இருப்பினும் நாம் எமது நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை கண்டுள்ளோம். இதற்கு மக்களின் அர்ப்பணிப்பு முக்கியமாக  அமைந்தது. இந்த வெற்றியை நாம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

உடல் பயிற்சி நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதிவழங்கப்படவில்லை. சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

கொழும்பு மாவட்டத்திலேயே பொருளாதாரத்திற்கான  வர்த்தக நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பலவகையுண்டு.. இங்கு ஊரடங்கு தற்பொழுது இல்லை எனவே பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

1.சுயதொழிலில் ஈடுபடுவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அத்தியாவசிய தேவைகளை கொண்டுள்ளோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

2. சமூக இடைவெளி இதற்க மிகவும் முக்கியமானதாகும். இதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

சுமார் 2 மாதங்கள் மற்றும் 2 வாரங்களிற்கு பின்னர் தமது நிறுவனங்களுக்கு பணிக்காக வருவோர்  கைலாகு கொடுத்து மகிழ்வது வழமை இது தவிர்க்க்பபட வேண்டும். எமது பாரம்பரியத்திற்கு அமைவாக வணக்கம் தெரிவித்து வரவேற்பது பொருத்தமாகும். கைலாகு கொடுப்பது கட்டி அரவணைப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு  ஏதுவாக அமையும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இருமல் தும்மலைக் கொண்டிருப்பவர்கள் அடையாளங் காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் நிறுவனம் அல்லது ஊழியர்கள்  உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து சுகாதார பிரிவிற்கு அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைவரும் முகக்கவசம் அணிவது முக்கியமானதாகும். நுகர்வோர் நிறுவனங்களில் கடந்த காலங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.  நாம் கவனத்தில் கொண்டோம். தொடர்ந்தும் நிறுவனங்கள் இவ்வாறு செயற்படுமாயின் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஹோட்டல்களை திறப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. சமைத்த உணவை பரிமாறுவோருக்கும், பெட்டிகடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தொழிற்துறையினருக்கு எதிராக நாம் செயல்படவில்லை. இதில் சுகாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்காக இவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இரவு நேர ஊரடங்கு சட்டத்தின் போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் பொலிஸார் செயற்படுவர். ஏனைய மாவட்டங்களிலும் பொலிஸார் செயற்படுவர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.