இந்தியாவில் மீண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு படையெடுத்து விவசாயத்திற்கு "கடுமையான ஆபத்தை" ஏற்படுத்தும் என, ஐ.நா., உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளன.

இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏதும் பலனளிக்கவில்லை. ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 வீத பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெட்டுக்கிளி கூட்டம் இந்தியாவை கடந்து பாகிஸ்தான் மற்றும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா  போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

ஜெய்ப்பூரில் மொட்டைமாடி முழுவதையும் ஆக்கிரமித்தித்த வெட்டுக்கிளிகள்

இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன.

மத்தியப்பிரதேசத்தில்  கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெட்டுக்கிளி தாக்குதல் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். 

ஏற்கனவே மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் சுமார் 5,00,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பரவியுள்ள பயிர்களை அழித்துள்ள இந்த கூட்டம், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர், பார்மர், பிகானேர், ஜோத்பூர், சுரு மற்றும் நாகூர், அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு பயிர்களை நாசப்படுத்தும் திறன் கொண்ட இந்த கூட்டத்தால், விவசாயிகள் தற்போதுஅச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.