எம்மில் பலர் ஸ்டைலுக்காக தொடங்கி, புகைப்பிடிப்பதை நாளாந்த பழக்கமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், மருத்துவர்கள் இவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்வதில்லை. புகை பிடிக்கும் பழக்கத்தை குறைத்து கொண்டபிறகே சத்திர சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

இதுகுறித்து மருத்துவர்கள் மேலும் விவரிக்கையில்,

“ சத்திர சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகள்  புகைக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கேட்டுக் கொள்வதுண்டு. ஏனெனில் சத்திரசிகிச்சைக்கு பின்னரான காலகட்டத்தில் புகைப்பவர்களால் தான், உடல்நலக் கோளாறுகள் அதிக அளவில் உண்டாகிறது. 

இவர்களுக்கு சத்திரசிகிச்சைக்கு முன்னர், நான்கு வார காலத்திற்கு முன்னர் புகைபிடிப்பதை முற்றாக குறைத்தால் தான், சத்திரசிகிச்சையின் போது அவர்களுக்கு வழங்கப்படும் மயக்க மருந்தால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாதிருக்கும். இதனை புறக்கணித்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மயக்கமருந்தின் காரணமாக பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் நான்கு வாரங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு, அவருடைய உடலிலுள்ள உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு 19% அதிகரிப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக இதய பாதிப்பின் காரணமாக சத்திர சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு இது பொருந்தும். சிகரட், பீடி ஆகியவற்றில் உள்ள நிக்கோட்டின் மற்றும் கார்பன் மோனாக்சைடு என்ற ரசாயனப் பொருட்கள், ஓட்சிஜனின் அளவை குறைத்து, இதய கோளாறுகளை சத்திர சிகிச்சைக்கு பின்னரும் அதிகரிக்கச் செய்யும். 

இதனால்தான் மருத்துவர்கள் சத்திர சிகிச்சைக்குப் பின்னர், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை புகை பிடிப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

டொக்டர் துர்கா தேவி.