மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஐயப்பனும் கோஷியும்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் நடிக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த படத்தில் மலையாள நடிகர் ப்ருத்விராஜும், பிஜுமேனனும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லிய இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அதிக விலைக் கொடுத்து பெற்றிருக்கிறார். 

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சசிகுமாரும், நடிகர் ஆர்யாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொரோனா ஊரடங்கு நிறைவடைந்த பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரீமேக் படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார், கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மறுஉருவாக்கத்திலும் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

இதனால் சசிகுமார் இனி ரீமேக் நாயகனாக வலம் வருவார் என்கிறார்கள். இதனிடையே நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் , எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.