(எம்.மனோசித்ரா)

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு தினமும் தொழிலுக்கு வந்து செல்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் முறையானதொரு செயற்திட்டத்தை முகாமைத்துவம் செய்யவில்லை என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.


மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிமாவட்டங்களிலிருந்து தினமும் கொழும்பிற்கு வந்து செல்லும் தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகள் பற்றி வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்து கொழும்பில் தங்கியிருந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தமது சொந்த இடங்களுக்கே திரும்பியிருந்தனர்.

அவ்வாறானவர்கள் மீண்டும் தமது தொழில் இடங்கள் நோக்கி செல்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெளியிடங்களிலிருந்து தினமும் கொழும்பிற்கு வருகை தருபவர்கள் தொடர்பில் அரசாங்கத்தால் முறையான முகாமைத்துவ செயற்திட்டம் எதுவும் செய்யப்படவில்லை. இது தொடர்பில் நாம் போக்குவரத்து திணைக்களத்திற்கு அறிவித்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சே முறையான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.