(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் ஊடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை அதனை மீறி செயற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று நாளை முதல் சமூக இடைவெளியைப் பேணாதோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகிறது.

எனினும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும். இதுவரையில் ஊரடங்கை மீறி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட அனைவரதும் அர்ப்பணிப்பினால் இலங்கை கொரோனா பரவலில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கீழ் மட்டத்தில் உள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்துக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு இந்த அறிவித்தல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸ் திணைக்களத்தினால் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாரேனுமொருவர் சமூக இடைவெளியை பேணுவதற்கு  முரணாக செயற்பட்டால் அவர்களை உடனடியாக கைது செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறியோர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்றிலிருந்து சமூக இடைவெளியைப் பேணாதோரும் கைது செய்யப்படுவர்.

ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நிறுவனங்களில் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். வெளியில் செல்லும் போது முககவசங்களை அணிவது சிறப்பானதாகும்.

சமூக இடைவெளியை பேணும் வகையில் முச்சகர வண்டி உள்ளிட்ட  வாடகை வாகனங்களை பயன்படுத்த முடியும். எனினும் தொடுகை நிலையங்கள்  (மசாஜ் நிலையங்கள்) மற்றும் சிறு உணவு விற்பனை கடைகள் ஹோட்டல்கள் என்பவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் போது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். அத்தோடு அண்மையில் மதுபான விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளி புறக்கணிக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இனி இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராகவும் விற்பனை நிலையங்களில் உரிமையாளர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.