(ந.தனுஜா)

ஸ்ரீலங்கா டெலிகொம் மீது முன்னெடுக்கப்படவிருந்த சைபர் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையால் தமது சேவை வழங்கல்களுக்கும், வாடிக்கையாளர்களின் தரவுகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன உள்ளகத்தரவுகள் மீதான சைபர் தாக்குதல் முயற்சி தொடர்பான தற்போதைய நிலைவரம் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா டெலிகொம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

ஸ்ரீலங்கா டெலிகொம் மீது நடத்தப்படவிருந்த சைபர் தாக்குதலை நாம் தடுத்திருப்பதுடன், அதனால் சில உள்ளக தகவல் தொழிட்நுட்பக்கட்டமைப்புக்கள் மாத்திரமே தாக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கனவே எமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறோம். இந்த சைபர் தாக்குதல் முன்னெடுப்பு தொடர்பில் எமது முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பினால் கண்டறியப்பட்டதுடன், அதனைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டடன. எனவே டெலிகொம் சேவையை வழங்கும் கட்டமைப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அதுமாத்திரமன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் எமது சேவை வழங்கலுக்கும், வாடிக்கையாளர்களின்  தகவல்களுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். அத்தோடு அரச மற்றும் வர்த்தக சேவை பெறுநர்கள், புரோட்பான்ட் சேவைகள், தொலைக்காட்சி அலைவரிசை சேவை வழங்கல் உள்ளிட்ட எத்தவொரு சேவை வழங்கலுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் வாடிக்கையாளர்களின் தரவுகளும் பாதுகாப்பாக உள்ளன.

உலகலாவிய ரீதியில் பலமுறை மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் நடவடிக்கையே டெலிகொம் மீதும் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே தற்போதைய நெருக்கடி நிலையையும் மனதிலிருத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.