இந்தியாவும் நேபாளமும் அவற்றுக்கிடையிலான திறந்த எல்லைகளையும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பேணிவளர்த்த விசேட உறவுமுறையின் அடிப்படைக்கு அச்சுறுத்தலாக அமயக்கூடிய காலாபாணி பிராந்திய பிரச்சினை தொடர்பாக ஒரு சூடான நிலையை அடைந்திருக்கின்றன.

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலீ இந்த பிரச்சினை தொடர்பில் குறிப்பாக, லிபுலேக் கணவாய்க்கு வாகனங்கள் செல்லக்கூடிய வீதியொன்று திறந்துவைக்கப்பட்டது தொடர்பில் ஆக்ரோஷமான நிலைப்பாடொன்றை எடுத்ததன் மூலமாக புதுடில்லியை இந்த மாதம் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சர்ச்சைக்குரிய காலாபாணி பகுதிக்கு அண்மையாக இருக்கும் இந்த லிபுலேக் கணவாய் சீனாவின் திபெத்தில் உள்ள கைலாஷ் மான்சரோவர் தலத்துக்கு செல்வதற்கு இந்திய யாத்திரிகர்களினால் பயன்படுத்தப்படுகிறது.

   

இந்தியாவைப் பொறுத்தவரை, லிபுலேக் கணவாயை திபெத்துக்கான வீதியின் ஒரு பகுதியாகவே எப்போதும் கருதிவந்திருக்கிறது.சீனாவுடனான 1954 உடன்படிக்கையொன்றில் வாணிபத்துக்கான எல்லை கடவைகளில் ஒன்றாகவும் லிபுலேக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.2015 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இன்னொரு வாணிப உடன்படிக்கையில் அது மீளவும் உறுதிப்படுத்தப்படடது.

   

இந்தியர்களுக்கு கைலாஷ் மான்சரோவர் யாத்திரை  மார்க்கத்தை சீனா திறந்துவிட்ட 1981 ஆம் ஆண்டில் இருந்து திபெத்துக்குள் நடந்துசெல்வதற்கும் அவர்கள் இந்த கணவாயைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீதி அதே வரிசையில் அமைந்திருப்பதுடன் இரு திசைகளிலும் பயண நேரத்தை மூன்று மணித்தியாலங்களினால்  குறைக்கவும் வசதியாக இருக்கிறது.

இந்திய - நேபாள எல்லைக்கு கூடுதல் படைகளை அனுப்பப்போவதாக பிரதமர் சர்மா ஒலீயும் நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கையாவாலியும் அச்சுறுத்தல் விடுத்து நிகழ்த்திய உரைகளும் தொடர்ந்து நேபாளம் தெரிவித்த கடும் ஆட்சேபங்களும் இந்திய அரசாங்கத்தை ஆத்திரமடையச்செய்தன.

   

லிபுலேக் கணவாயை மாத்திரமல்ல, இந்தியப் பிராந்தியத்திற்குள் இருக்கும் மற்றைய பகுதிகளையும் ( பிரிட்டனுடனான 1816 சுகோலி உடன்படிக்கையை காரணம் காட்டி ) நேபாளம் உரிமைகோரும் புதிய அரசியல் வரைபடமொன்றை அந்நாட்டு அமைச்சரவை அங்கீகரித்திருப்பதை ' ஒருதலைப்பட்சமானது ', ' செயற்கைாயனது ' , ' ஏற்றுக்கொள்ளமுடியாதது ' என்று இந்திய வெளியுறவு அமைச்சு வர்ணித்திருக்கிறது." சீனாவில் இருந்து வருகின்ற வைரஸை விடவும் இந்திய வைரஸ் கூடுதல் ஆபத்தானது " என்று பிரதமர் ஒலீ செய்த கிண்டலும் " வெளிச்சக்திகளின் சார்பில் ( பிதானமாக சீனா ) நேபாளம் தகராறை ஏற்படுத்துகிறது " என்று இந்திய இராணுவத்தளபதி தெரிவித்த கருத்தும் பதற்றத்தை மேலும் அதிகரித்தன.

   

எல்லைத் தகராறுகள் புராதன வரலாற்றையும் பொதுவான எல்லைகளையும் கொண்ட நாடுகளிடையே வழமையானவையாகும்.காலாபாணி பிரச்சினையும் இந்தியாவும் நேபாளமும் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்துக்கொள்ளவேண்டிய அத்தகைய ஒரு பிரச்சினையேயாகும். இந்த பிரச்சினையை ஆராய்வதற்காக 2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியினாலும் அன்றைய நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவினாலும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட இருநாடுகளினதும் வெளியுறவு செயலாளர்கள் அதற்குப் பிறகு சந்திப்பொன்றுக்கான ஏற்புடைய திகதியை தீர்மானிப்பதற்கு தவறிவிட்டார்கள். 

     

இந்த பிரச்சினையில் துரிதமாக செயற்படத்தயங்கி காலத்தை கடத்தியதை இந்தியா ஒத்துக்கொண்டேயாக வேண்டும் ; இரு வாரங்களுக்கு முன்னர் கூட, காத்மாண்டுவில் இந்த விவகாரங்கள் ஒரு கொதிநிலைக்கு வந்தபோது, தொற்றுநோயைக் கட்டுப்படுத்திய பிறகு சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு வெளிப்படுத்திய பிரதிபலிப்பு காத்மாண்டுவுக்கு முக்கியமானதாக இருக்கின்ற ஒரு பிரச்சினையை அநாவசியமாக தட்டிக்கழிப்பதாகவே அமைந்தது.

     

பிரதமர் ஒலீயின் அரசாங்கம் கடந்த நவம்பரிலும் இந்த பிரச்சினையை கிளப்பியது. ; அரசியல் தூதுவர் ஒருவரை புதுடில்லிக்கு அனுப்புவதற்கு அவர் முன்வந்தபோதிலும், அது மறுதலிக்கப்பட்டது. ஒலீ கூடுதலான அளவுக்கு ஒரு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மூண்டிருக்கும் அதிகாரச்சண்டை தூண்டுதல் அளித்திருக்கிறது என்பது தெளிவானது.

     

" கலியாணமும் சாப்பாடும் "என்று அடிக்கடி உணர்வுபூர்வமாக வர்ணிக்கப்படுகின்ற நேபாளத்துடனான உறவுகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது  இந்த பிரச்சினையை கையாளுவதில்  இந்தியா தாமதம் காட்டக்கடாது.ஏற்கெனவே வைரஸ் தொற்றுநோய் காரணமாகவும் லடாக்கிலும் சிக்கிமிலும் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் தகராறு காரணமாகவும் பெருமளவு பிரச்சினைகளை கைவசம் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா நேபாளத்துடனான இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதில் துரித அக்கறை காட்டவேண்டும்.

 

( த இந்து )