(செ.தேன்மொழி)

அரசாங்கம் மக்கள் மீது சுமைக்கு மேல் சுமையை சுமத்தி தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சித்துவருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடு எத்தகைய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தாலும்  நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் பொருப்பாகும் என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வைரஸ் பரவல் காரணமாக  பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் சுகைக்குமேல் சுமையை அவர்கள் மீது சுமத்தி அரச வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றது. 

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அதனை தடுப்பதற்காக முயற்சிக்காமல் ரின் மீனுக்கும் பருப்புக்கும் சலுகை வழங்குவதாக குறிப்பிட்ட அரசாங்கம், தற்போது சலுகை வழங்கவேண்டிய தருணத்தில் அதனையும் மக்களிடமிருந்து பறித்துள்ளது. அத்தியவசிய பொருட்களுக்கான வரியை அதிகரித்துள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்புக்கான வழியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

நாடு எத்தகைய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தாலும்,  அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் இருப்பதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை, எந்த நிலைமையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும். 

ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு தமது முதலீட்டை அதிகரிக்க முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமல் வரி அதிகரிப்பு தெடர்பில் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை நீக்கி மக்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயகமான ஆட்சிமுறைக்கு தேர்தல் என்பது பிரதானமானதாகும். ஆனால் அது  சுகாதார பிரிவு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடம்பெற வேண்டும். பாராளுமன்றமும் இயங்காத நிலையில் ஜனாதிபதியும், ஆளுனர்களும் மாத்திரம் நாட்டை ஆட்சி செய்வது என்பது நியாயமற்ற ஆட்சி முறையாகும். அதனால் உரிய தரப்பினரின் ஆலோசனையுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

இதேவேளை இலங்கை மக்களை வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பது தொடர்பிலே நெருக்கடி நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ள போதில், இந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரமுடியாமல் இருக்கும் நபர்களை அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தாமல், சீஷெல்ஸ் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களை இங்கு அழைத்துவந்து காப்பாற்ற முயற்சிப்பது என்பது அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.