திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணொருவர் இன்று காலை 4.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய கம்பஹா பயாகல பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் அவரை இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிசாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 21 திகதி குவைத்திலிருந்து நாடு திரும்பிய 162 பேரை திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தனர். மரணமானவர் இவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த பெண்ணின் சடலம் பொதிசெய்யப்பட்ட நிலையில் இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் இரத்த மாதிரியும் அவருடன் தங்கி இருந்த இருவரின் இரத்தமாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா நோய் தொற்று தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 21 திகதி கட்டார் நாட்டிலிருந்து 142 பேர் நாடு திரும்பி நிலையில் திருகோணமலை கிளம்ப்பம் பேக் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.