கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் முதல் கட்டமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் இதனை விட பெரிய நகைச்சுவை இருக்கும் என்று கூற முடியாது. கொரோனா  முடிவுக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லும் என்று தெரியாது. 27 ஆண்டுகள் கூட செல்லலாம் அதனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .

அமைச்சருக்கு இந்த விடயம் கூடத் தெரியாதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகப் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமல்ல அரசின் 5,000 ரூபாய் உதவித் தொகையும் கிட்டவில்லை என மலையக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெருந்தோட்டப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் கொரோனாவை அடுத்து பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதேவேளை, பொருட்களின் விலைவாசிகள் பன் மடங்கு அதிகரித்துள்ளன. அடுத்த சில மாதங்களுக்கு இதே நிலையே காணப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு  வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் குண்டூசி தொடக்கம் சட்டை பின் வரை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. 

எனவே வரி விதிப்பில் இருந்தும் எந்தப் பொருளும் தப்பும் என்று கருதமுடியாது. குறிப்பாக  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு, செத்தல் மிளகாய், வெள்ளைப்பூண்டு, கிழங்கு உள்ளிட்ட 26 பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை இந்த வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதனால் அனைத்துப்பொருட்களுக்கும் விலைகள் அதிகரிக்கும் என்று கருதலாம். இதேவேளை அண்மையில் மாளிகாவத்தையில் தனியார் வர்த்தகர் ஒருவரினால், நிதி நிவாரணம் வழங்கப்பட்டபோது, சனநெரிசலில் சிக்கி  3 பெண்கள் உயிரிழந்தார்கள். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். நாட்டின் வறுமை நிலையை எடுத்துக்காட்டுவதற்கு இதனை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் மாத்திரமன்றி நடுத்தர மக்களும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.  இதனைக் கருத்தில் கொண்டு நாட்டில் பட்டினிச்சாவு ஏற்படாது இருப்பதை, உறுதி செய்வது இன்றியமையாதது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்