ஈழப்போராட்டத்தின் ஆதரவாளரும் இந்தியாவின் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிங்கம்பட்டியின் இறுதி மன்னருமான ஜமீன்தார் றி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி நேற்று காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரத்திலிருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் சிங்கம்பட்டி ஜமீன் அமைந்துள்ளது.

கி.பி. 1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சிங்கம்பட்டி ஜமீன், தமிழ்நாட்டில் 72 பாளையங்களில் ஒன்றாக இருந்தது.

அதாவது காலம் காலமாக இருந்த அரசர் ஜமீன் முறை பின்னாளில் பாளையக்காரர்கள் என்று சொல்லப்படும் குறுநில அரசாக இருந்தது.

இவர்களின் அதிகாரம் வெள்ளையர் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. பெரும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள், மன்னர்களை தங்களுக்கு கப்பம் கட்டுபவர்களாக அடக்கி ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 களில் மன்னராட்சி முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டது.

அதற்கு சில வருடங்களுக்கு முன், சிறு வயதில் அதாவது மூன்று வயதிலேயே மன்னராக முடிசூட்டப்பட்டவர் முருகதாஸ் தீர்த்தபதி. அதன் காரணமாகவே இந்தியாவில் முடிசூட்டப்பட்ட மன்னர்களில் இறுதி மன்னர் ஆவார் .

இவருக்கு வயது 89. பல்வேறு அரசியல் சூழல்கள் மாற்றமடைந்தாலும் இவர்களின் செல்வாக்கு அப்பகுதி மக்களிடத்தில் இருக்கவே செய்கிறது. இவர் கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்தார்.

நேற்றிரவு அவர் இயற்கையான முறையில் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

நம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் வாழ்ந்த இந்த சிங்கம்பட்டி ஜமீனின் 31 ஆவது பட்டத்திற்கான இந்த அரசர் தற்போது நம்மிடம் இல்லை என்ற போது வருத்தம் எழத்தான் செய்கிறது.

அவரது மறைவிற்கு தி.மு.கவின் முக்கிய பிரமுகரும், சட்டத்தரணியுமான கே.எஸ்.இராதாகிருஸ்ணன் தனது சமூக ஊடக பக்கத்தில் அஞ்சலிக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்-

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார்.

ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம். கடந்த 1972 ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம் லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.

அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை.

கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.

இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம்.

எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள்.

அவர்களை அழைத்துச்செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004ல் நிமிர வைக்கும் நெல்லை என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , “நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி” என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார்.

நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.