ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக  நீண்டகாலமாக இஸ்ரேலிய பிரதமராக பதவிவகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை இன்று ஜெருசலேம் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

TamilMirror.lk

இஸ்ரேலின் வரலாற்றில் அரச பதவியில் இருக்கும் ஒருவர் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் 70 வயதான நெதன்யாகுஆவார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே,  நெதன்யாகுவுக்கு எதிராக பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்தன.

அது தொடர்பான விசாரணையும் இடம்பெற்று வருகிறது. 

தனக்கு சாதகமாக செய்தி வெளியிடுவதற்காக ஊடக முதலாளிகளுக்கு பணம் கொடுத்தது, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அந்த நிறுவனங்களிடமிருந்து பரிசு என்ற பெயரில் லஞ்சம் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து, இஸ்ரேல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் நெதன்யாகு குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில் நெதன்யாகு இன்று இஸ்ரேலிய நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜரானார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விசாரணைகளில், "நான் படித்தேன், குற்றச்சாட்டை நான் புரிந்துகொள்கிறேன்." என நெதன்யாகு நீதிபதிகளிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.