உலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் இதனை பரிசோதித்து அறியலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த மருத்துவ இதழான ‛த லான்செட்' (The Lancet)  சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்துக்கான ஆய்வுக்காக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு மாறுபட்ட அளவுகளில் மருந்ழத செலுத்தியது. 

Ad5-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அதுவரை அவர்களது உடலில் எந்த தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.

இதன்பொருள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதே ஆகும். இந்த தடுப்பு மருந்து சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் போரிடக் கூடியது என்றும் The Lancet இதழ் கூறியுள்ளது.

முதல்கட்ட பரிசோதனையின் வெற்றி, அடுத்தகட்ட சோதனைகளை தொடர வழி செய்வதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 2 ஆவது கட்டமாக 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மேலும் ShaCoVacc மற்றும் PiCoVacc ஆகிய இரு தடுப்பு மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கவும் சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.