கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை 30 இளைஞர்கள் அடங்கிய ரவுடிக்கும்பல் ஒன்று  மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதோடு, சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

செல்வாநகர் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள வீதியில் வசிக்கின்ற ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து அவர் ரவுடிகளை வரவழைத்து  அட்டக்காசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை 6.20 க்கு வந்தவர்கள் 7.15 வரை அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வீடுகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் அனைவரும் வயல்களுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் இல்லையெனில் அவர்களும் வாள் வெட்டுக்குள்ளாகியிருப்பார்கள் என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.

வாள் வெட்டுக்கு இலக்கானவர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கியதைத் தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.