(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்க்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 62ஆயிரத்து 677  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 612 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  கடந்த மார்ச் மாதம்  20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு மீள் அறிவித்தல் வரும் வரை அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று சனிக்கிழமை  காலை 6 மணிமுதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிவரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 515 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடமிருந்து 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருமாதங்களும் நான்கு நாட்களும் கடந்துள்ள நிலையில், ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக 62 ஆயிரத்து 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 612 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 19 ஆயிரத்து 586 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களுள் 7661 பேருக்கு எதிராக தன்டணையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.