மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரசேத்தில் முதியவர் ஒருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் 

கொம்மாந்துறை உடையார் வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய கணவதிப்பிள்ளை நாகராசா என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது மகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த முதியவர் வீட்டைவிட்டு மகள் வீட்டில் இருந்து சம்பவதினமான நேற்று காலை வெளியேறி உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில்  இரவு அந்த முதியவரி்ன் மகள் தனது தந்தையை சென்று பார்த்து வருமாறு 17 வயதுடைய மகனை அனுப்பியுள்ளார் 

மகன் அங்கு சென்றபோது வீடு இருட்டாக இருந்ததையடுத்து மின்விளக்குகளை ஒளிரச் செய்தபோது குறித்த முதியவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு உடனடியாக தனது தாய் மற்றும் உறவினருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.