- ஆர்.ராம்

மூன்று தசாப்த போரின் இறுதியில் மனித உரிமைகள், மனிதபிமானச் சட்ட மீறல்கள் “தாராளமாக” அரங்கேறியமைக்கு ஆங்காங்கே சாட்சிகளும், ஆதரங்களும் ஆயிரமாயிரய் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து போர்த் தருணத்தில் நிகழ்த்தப்பட்ட ‘மீறல்களுக்கு” நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் தமிழ்த் தரப்பிடம் வலுத்தன. 

அதன் விளைவால், சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் உள்நாட்டு தமிழ்த் தரப்பின் சார்பில் பிரசன்னமான அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிக்கோரிக்கைகள் முன்வைக்கப்படலாயின. 

2012ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பகிரங்மாக முன்வைக்கப்பட்டன. சாட்சிகளும், ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பிரகாரம் இலங்கை அரசாங்கத்தின் “பொறுப்புக்கூறலை” வலியுறுத்தும் வகையிலான தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாயின. 

அவ்வாறு தீர்மானங்கள் நிiவேற்றப்படுகின்றபோது போர் வெற்றியுடன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த அரசு ஜெனீவாத் தீர்மானங்களை பயன்படுத்தி “மின்சாரக்கதிரை” கதைகளை தென்னிலங்கையில் கூறி தனது வாக்குவங்கிகளை நிரப்புவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டு வந்தது. தவிரவும் அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவதற்கோ, அல்லது சீர்தூக்கிப்பார்ப்பதற்கோ எள்ளளவும் விரும்பியிருக்கவில்லை. 

அதன் பின்னர் 2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த விடயத்தில் மாறுபட்ட அனுகுமுறையொன்றை பின்பற்றுவதாக வெளிப்படுத்தியது.  பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனது இணை அனுசரணையையும் வழங்கியிருந்தது. அதுமட்டுமன்றி சர்வதேச அரங்கிலே தனது  “பொறுப்புக்கூறலை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டும் இருந்தது. 

ஆனால் ஆட்சியில் இருந்த  அவற்றில் எதனையும் முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கான அரசியல் இயலுமையை அந்த அரசு கொண்டிருக்கவில்லை. நான்கரை ஆண்டுகள் தான், தாம் ஆட்சியில் இருக்கப்போகின்றோம் என்பதை என்பதை மறந்து “அரசியாசனத்தினலிருந்து இறங்காத நிரந்த ஆட்சியாளர்கள் தாமே” என்ற மனநிலையில் ஒட்டுமொத்த ஜெனீவா விடயத்தினை மெல்லெனப் பலவீனப்படுத்தி முற்றாக அகற்றுவதற்கான  திட்டங்களையே திரைமறைவில் வகுத்திருந்தது.

‘தம்கைகளைக் கொண்டு தாமே குட்டிக்கொள்வது’ போன்று ஜெனீவா தீர்மானத்தினை மலினப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகைளையும் சர்வதேசம் அதன்மீது கொண்டிருக்கின்ற “பிடி”யை தளர்த்துவதற்கவும் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தங்களிலிருந்து முழுமையாக விடுபடுவதற்காகவும் காய்களை நகர்த்தி பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளையே முறையாக கையாண்டது. 

முதலில் ஜெனீவா தீர்மானத்தினை உள்நாட்டில் அமுலாக்க வேண்டும் என்ற காரணத்தினை முன்வைத்து தீர்மானங்களை முடிந்தவரையில் வறிதாக்க அதற்க இணை அனுசரணை வழங்கியது. பின்னர் கடந்த மஹிந்த அரசாங்கத்தினைப் போன்று வெட்டொன்று துண்டு இரண்டாக நேரடியாக ஜெனீவா தீர்மானத்தினை எதிர்க்காமல் அதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு முயற்சிப்பதுபோல் நடவடிக்கைகளை முன்னெடுத்து அவை தோல்வியில் நிறைவுக்கு வருவது போன்று சித்தரிக்க ஆரம்பித்தது.

நாட்டில் புரையோடிப்போயிருந்த ஏழு தசாப்த இனப்பிரச்சினைக்கு தீர்வளிப்பதற்கு “புதிய அரசியலமைப்பொன்றை உருவக்குதல்” என்ற செயற்பாட்டினுள் பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளை உள்ளீர்த்து பாதிக்கப்பட்ட தரப்பின் இதர விடயங்களை கவனத்தில் கொள்வதிலிருந்து திசைதிருப்பியிருந்தது.  

பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் பிரதிநிதிகளும் “தங்கமுட்டை” கிடைக்கப்போகின்றது என்ற கனவில் தமது மக்களின் பாதிப்புக்களுக்கான நீதியை அழுத்திக் கோருவதற்கு பதிலாக அமைதி காத்தனர். ‘சில்லறை விடயங்களுக்காக’ அனைத்து விடயங்களுக்கும் தீர்வளிக்கவல்ல ‘புதிய அரசியலமைப்பு’ பணிகளை குழப்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். 

அதனைவிடவும் இத்தனை துயரங்களையும் கண்ட தமிழ் மக்களுக்கு நிச்சயம் விடில் கிடைக்கும். அதனை அப்போது ஆட்சியில் உள்ள கூட்டரசாங்கமே வழங்கும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே அத்தகைய ஆட்சியாளர்கள் ஆட்சிப்பீடத்திலிருந்து அகன்றுவிடக்கூடாது என்பதிலும் கூடிய கரிசனை காட்டினார்கள்.  அதற்காக வழங்கப்பட்ட நிபந்தனையற்ற ஆதரவுகளும், நேசக்கர நீட்டல்களும் எண்ணிலடங்காதவை. இறுதியாக நீதிமன்றம் வரையும் செல்லத்தவறியிருக்கவுமில்லை.

அதுமட்டுமன்றி ஜெனீவாவில் கூட அந்த ஆட்சியாளர்கள் நெருக்கடிக்குள்ளாகிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிதிகள் இருந்தனர். இதனால் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக காத்திருந்த மக்கள் அதிருப்தி அடைந்தார்கள். தாமே நேரடியாக் சென்று சாட்சியங்களை வழங்கி நீதி ஆரம்பித்தார்கள். 

ஆட்சியாளர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நம்பியிருந்தமையால், அவர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சார்ந்திருந்த ஏனைய அரசியல் தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்களையும், பிரசாரங்களையும் ஆரம்பித்தனர். 

அதற்கு உதாரணமாக, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தினைக் குறிப்பிடலாம். ஆனால் அத்தரப்பினரின் தீர்மானங்களும், பிரசாரங்களும் எவ்விதமான நன்மைகளையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை. 

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தவறிழைக்கின்றார்கள் என்று  குற்றச்சாட்டு வைப்பவர்களிடத்திலிருந்து எவ்விதமான நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கோசமிட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் உள்நாட்டில் இருக்கும் தூதுரங்களிடத்தில் முறையாக எவ்வித எடுத்துரைப்புக்களைக் கூட செய்திருக்கவில்லை. 

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் செயற்படுவோரின் இத்தகைய கையறு நிலையால் “பொறுப்புக்கூறல்” என்பது  கானல் நீராகியிருந்தது. இத்தகைய சூழலில் தான்  மீண்டும் ராஜபக்ஷவினர் ஆட்சிப்பீடத்திற்கு வந்திருந்தார்கள். 

கடந்த காலத்தில் ‘படைவீரர்களை சர்வதேசத்தின் முன் நிறுத்தப்போவதில்லை, எந்தவொரு படைவீரரையும் மின்சாரக்கதிரைக்கு அனுப்பமாட்டோம்’ போன்ற  சூளுரைப்புக்களைச் செய்து வந்தவர்கள் இம்முறை அவற்றையெல்லாம் கடந்து கூட்டரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஜெனீவா தீர்மானத்திலிருந்தே வெளியேறுவதாக அறிவித்தார்கள். 

தற்போது, அதிலிருந்தும் மேலும் ஒருபடிசென்று, இலங்கை படையினரை திட்டமிட்ட வகையில் இலக்கு வைத்து அழுத்தங்கள் தொடருமாக இருந்தால் அவ்வாறு அழுத்தங்களை வழங்கும் சர்வதேச கட்டமைப்புக்களிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்வதற்கு தயங்கப்போவதில்லை என்று போர் வெற்றிவிழாவில் ஜனாதிபதி கோத்தாபய சூளுரைத்திருக்கின்றார். 

அடுத்த தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையிலேயே அவர் இத்தகைய கருத்தினை வெளியிட்டிருப்பதால் ‘தேர்தலுக்கான அரசியல் நோக்கமுடைய’ கருத்தென்று வெறுமனே ஒதுக்கிவிடமுடியாது. காரணம், தற்போதைய ஆட்சியாளர்கள் ஜெனீவா வியடத்தினை ‘தீண்டத்தகாததொன்றாகவும்’ தமது அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் தரப்பின் ஒத்துழைப்புடன் சர்வதே நாடுகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவுமே கருதுகின்றார்கள்.

இத்தகைய மனநிலையில் இருப்பவர்கள் நிச்சயமாக ஜெனீவா தீர்மானத்தினை அரசியலுக்காக மட்டும் கையாளமாட்டார்கள் என்பது வெளிப்படையானது

ஆகவே ராஜபக்ஷவினர் நிச்சமாக ஜெனீவா விடயத்தினை முழுமையாக துடைத்தெறிவதனையே இலக்காக கொண்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தமான விடயமாகின்றது. மேலும் ஆட்சியைக் கைப்பற்ற முன்னரேயே தற்போது ராஜபக்ஷவினரைச் சூழந்திருப்பவர்கள் தனிப்பட்ட அமைப்புக்கள் ஊடாக ஜெனீவாவுக்குச் சென்று வாதிட்டு வந்திருந்தனர். 

அதுமட்டமன்றி ஆட்சி அமைந்தவுடன் ஜெனீவாவிலிருந்து வெளியேறுவதற்கு எத்தகைய பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் சிறந்த திட்டமிடல்களுடன் துறைசார் நிபுணர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டிருந்தார்கள். 

ஆக, ராஜபக்ஷவினர் நிச்சயமாக ஜெனீவா அரங்கில் இலங்கை இருப்பதனையோ, தொடர்ந்தும் சர்வதேசத்திடம் பொறுப்புக்கூறலின் பெயரால் தம்மீதான “பிடி” இருப்பதனையோ நிச்சயமாக விரும்பப்போவதில்லை. அதிலிருந்து முற்றாக விடுபடுவதற்கே முனைந்துகொண்டிருப்பார்கள். 

சர்வதேசத்துடன் ‘விடக்கண்ணன்,கொடாக்கண்ணன்களாக’ ராஜபக்ஷவினர் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சாதமான நிலைமைகள் ஏற்படும் என்று கணக்குப்போடும் ஒரு தரப்பினரும் இருக்கின்றார்கள். இதில் அரசியல் தரப்பினரும் உள்ளடங்குகின்றார்கள். 

ஆனால் தற்போதைய பூகோளச் சூழலில் அவ்வாறான நிலைமைகள் இல்லை. பிற நாடுகளையோ, அமைப்புக்களையோ பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினர் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது. காரணம் அத்தரப்புக்களுக்கென்று தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன. அதற்கு அமைவாகவே அவற்றின் நகர்வுகள் இடம்பெறவுள்ளன. 

ஆகவே நீதியைக் கோரும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இதுவரையில் நடந்தவற்றை மீளாய்வு  செய்ய வேண்டும்.  ஒவ்வொரு மனித உரிமைப்பேரவை அமர்வுகளின்போதும் ஜெனீவா நோக்கி படையெடுப்பதும் பின்னர் அவ்விடயத்தினை மறந்துவிடுவதுமே நிகழ்ந்திருக்கின்றது. 

கட்டமைக்கப்பட்ட இனப்பவழிப்புநடைபெறுகின்றது என்று தற்போதுவரையில் வலியுறுத்தும் தரப்பினர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொன்று முறையான சாட்சியங்களுடனான ஆவணங்களை தயாரிக்கவில்லை. தமிழர் மரபுரிமைப் பேரவையின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிகளை அபகரிப்பதன் மூலம்; ‘கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது’ என்ற ஆவணத்தனை தவிர இதுவரையில் எவ்விதமான பிரதிகளும் தமிழர் தரப்பிடமிருந்து வழங்கப்படவில்லை. 

அதனைவிடவும் போரின் பின்னரான சூழலில் எத்தனை பெண்தலைமைத்துவ குடும்பங்கள் இருக்கின்றன, மாற்றுத்திறனாளிகள் எத்தனைபேர், காணமலாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் எத்தனை, பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எத்தனைபேர், போர்வடுக்களாக துகள்களுடன் வாழுபவர்கள் எத்தனைபேர் உள்ளிட்ட எந்தவொரு தரவுகளோ கட்டமைக்கப்பட்ட முழுமையான தகவல்களே இல்லை. 

அதனைவிடவும் முள்ளிவாய்க்காலில் மடிந்த உறவுகளை நினைவு கோரும் 11ஆவது  நினைவேந்தல் பிரகடனத்தில் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தினை சுட்டிக்காட்டுவதற்கு மிருசுவில் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை உதாரணங்காட்டும் கையறுநிலையிலேயே பாதிக்கப்பட்ட தரப்பு காணப்படுகின்றது.

உணர்வெழுச்சியான நினைவேந்தலையோ ஏற்பாட்டாளர்களையோ குற்றம் சாட்டுவது என்பதற்கு அப்பால் பரந்துபட்ட கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள், கருத்தாடல்கள் இன்மையின் பின்னடைவாலேயே இத்தகைய சம்பவங்களும், தவறுகளும் நிகழ்கின்றன என்பதை சுட்டுரைப்பதே நோக்கமாகும். 

சர்வதேச கட்டமைப்புக்களிலிருந்து விலகும் ராஜபக்ஷவின் துணிகரமான அறிவிப்பு நடைமுறைச்சாத்தியமாகாது என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு நடைபெற்றால் எமக்கு நன்மையே என்று கண்மூடி கதை பேசுவதை விடுத்து, இனியாவது, இருக்கும் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கட்டமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குபடுத்தல்கள் மூலமாக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுத்த விளைவதே சாலப்பொருத்தமானதாகும். 

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் நடைபெற்றன என்று வாயால் கூறிக்கொண்டிருப்பதை விடவும் அழிந்துகொண்டிருந்தும் நேரடிச் சாட்சியங்களை பாதுகாப்பாக பயன்படுத்த முயலவேண்டும்.  இந்த விடயத்தில் அரசியல் போட்டிகளையும் தனிமனித மதிப்பை பெறும் பிரயாசைகளையும் கைவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், உயிர்த்தியாகம் செய்த உறவுகளுக்குமா ஒன்றிணைய வேண்டும். அதுவே அர்த்தமுள்ள செயற்பாடாக இருக்கும்.