சி.சி.என்.

பொதுத்தேர்தல் எப்படியும் இடம்பெற்றே தீரும் என்ற  நம்பிக்கையில் ஆளுந்தரப்பும் எதிர்த் தரப்பும்   தயார் நிலையிலேயே இருக்கின்றன.  அதிக ஆசனங்களை கைப்பற்றுவதுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறும் நோக்கில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வியூகங்களை வகுத்து வருகின்றது.   மறுபக்கம் ஐ.தே.கட்சி இரண்டாக  பிளவுபட்ட நிலையில் ரணில் தரப்பு அணியினர் யானை சின்னத்திலும்  பல கட்சிகள் ஒன்றிணைந்து சஜித்து தலைமையில் உருவாகிய ஐக்கிய மக்கள் சக்தி   தொலைபேசி சின்னத்திலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளன. 

அதிலும் வேட்பு மனுத் தாக்கல்கள் எல்லாம் முடிவுற்று மாதங்கள் கடந்த நிலையில் சஜித்தின்  ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக வழங்குத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  அதாவது  கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று  ஐ.தே.கவின்   கொழும்பு மாவட்ட வேட்பாளர்   ஹேரத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதிய கூட்டணியின் பொதுச் செயலராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியின் செயல் குழுவின் அனுமதி பெறப்படாததால் , அவரது  கையொப்பத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் செல்லாது என அறிவிக்க  வேண்டும்  என்பதே வாதம்.  இப்படியான  சட்டச்  சிக்கல்களை எல்லாம்  ஆராய்ந்து பார்க்காமலா  வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்?  

இறுதி நேரத்திலாவது சஜித் அணியை ஏதாவது செய்து தேர்தலில் போட்டியிடாது தடுப்பதற்கு ரணில் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் முதலாவது, கணிசமான வாக்குகளைப் பெற்று  பொதுஜன பெரமுனவோடு இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும்  எண்ணத்தில் சஜித் தரப்பு இருக்கலாம் என்ற ஊகத்தில் ரணில் தரப்பு உள்ளது.  அதுவே இங்கு எழுந்துள்ள பிரச்சினை.

அப்படி  நடந்தால்  ஐ.தே.க  ஓரளவு ஆசனங்களுடன் மொட்டுக்கு ஆதரவளித்து ஒரு தேசிய அரசாங்கத்துக்கு செல்ல முடியும். ஏனென்றால் தேசிய அரசாங்கத்தின் ஆரம்பமே ரணில் தானே? எதிர்கட்சி ஒன்றே இருக்கக் கூடாது என்று சுதந்திர கட்சியுடன் கைகோர்த்து  தேசிய அரசை  உருவாக்கி ருசி கண்டவர் அதை விடுவாரா? அது மட்டுமல்ல மொட்டுடன் சங்கமித்தால் தனது தரப்பு  நிதிக்குற்றச்சாட்டுகளை சற்று ஆறப் போடலாம்.  

சஜித் தரப்புக்கும் அந்த எண்ணம் இல்லாமலிருக்காது.  கணிசமான ஆசனங்களை சஜித்  தரப்பு பெறுமிடத்து பாராளுமன்றில்  ஆளுந்தரப்புக்கு மூன்றிலிரண்டு ஆதரவை நல்க அவரை   அரசாங்கம் அணுகலாம். அதற்கு பிரதியுபகாரமாக சில அமைச்சுப்பதவிகள் , பிரதி அமைச்சுப்பதவிகளும்  கிடைக்கலாம்.  ஏனெனில் அடுத்து ஐந்து வருடங்களுக்கு கோட்டாபாயவே ஜனாதிபதி அவரது தலைமையில்  அரசாங்கமும் தொடரும். கிடைக்கும் சலுகைகளை யார் தான் வேண்டாம் என்று கூறப்போகின்றார்கள் ?  எனவே  எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி  கூடுதல் ஆசனங்களைப் பெற பிரயத்தனங்கள் எடுக்கும் என்பது மட்டும் நிச்சியம். பெரும்பான்மை வாக்குகள் அனைத்தும் மொட்டின் பக்கமே சாய்ந்துள்ளதால்  ஐக்கிய மக்கள் சக்திக்கு சவால் உள்ளது. 

அக்கூட்டணியின்  சின்னம் தொலைபேசி . தொடர்ச்சியான அழைப்புகளின் மூலமே மக்களின் பதிலை இந்த கூட்டணி பெறக்கூடியதாக இருக்கும்.  அதே வேளை யானை சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கடிகள் இல்லாமலில்லை. அதற்கு ஒரு உதாரணம் கூறலாம். 

 நாட்டின் நெருக்கடி   நிலைமைகள் ஒரு பக்கம் அதிகரித்துச் செல்ல மறுபக்கம் எதிர்த்தரப்புகள் அனைத்தும் பாராளுமன்றை கூட்ட வேண்டும் என அழுத்தங்கள் கொடுத்து வந்தன. இதை சமாளிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் அனைத்து முன்னாள் எம்.பிக்களையும் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் கலந்தாலோசித்து அதில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருந்தன. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி  கலந்து கொள்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தது மட்டுமல்லாது அறிவிப்பையும் விடுத்திருந்தது.  ஆனால் இறுதி நேரத்தில் அச்சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஐ.தே.க பொதுச்செயலாளர் அகில விராஜ் தெரிவித்திருந்தார். ஏனெனில் ரணில் தலைமையிலான ஐ .தே.கவினர்  மிகச்சிறிய அளவிலானோரே  அச்சந்திப்பில் கலந்து கொள்ள சம்மதித்திருந்தனர். பெரும்பாலானோர் சஜித்தின் பக்கமே இருந்தனர். 

அச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தால் ஐ.தே.கவின் உண்மையான பலம் நாட்டு மக்களுக்கு தெரியவந்து விடும். அது தேர்தலிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அச்சந்திப்பை ஐ.தே. க தவிர்த்திருந்தது. 

இது ஒருக்கமிருக்க  ரணிலுக்கு சஜித்தை விட தற்போது அதிக தலை வலியை கொடுத்திருப்பது என்னவோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தான்.  அவர்கள் அலரி மாளிகை சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையும் பிரதமரிடம் கையளித்திருந்தனர். மட்டுமன்றி கூட்டமைப்பின் பேச்சாளர்  எம்.ஏ. சுமந்திரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி பிரதமரை சந்தித்து  பேசியிருந்ததோடு அவர்களின் விபரங்களையும்  கையளித்திருந்தார். 

இப்படி ஒரு நகர்வை ரணில் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. ஏனெனில் தேர்தல் முடிந்த பிறகு மேற்படி தமிழர் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டமைப்பின் ஆதரவை கோரலாம்.  கூட்டமைப்பினர்   எந்த சந்தர்ப்பத்திலும் அமைச்சுப்பதவிகளை பெற மாட்டர் . ஆனால் தமது பிரதேசத்தின் காணி விடுவிப்பு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை , இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் ,தாம் சுதந்திரமாக செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையே  சலுகைகளாக எதிர்ப்பார்ப்பர். இது ஜனாதிபதி ,பிரதமர் உட்பட அனைவரும் அறிந்த விடயமே. 

எனவே அமைச்சுப்பதவிகள் ஒன்றையும் வழங்காது குறித்த தரப்பினரின் ஆதரவை பாராளுமன்றில் பெற்று பின்பு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதென்பது அரசாங்கத்துக்கு ஒரு  சிரமமே இல்லாத வேலை.  ஆகவே  இவ்வாறான எதிர்ப்பார்ப்புகள் ,நகர்வுகளுடன் தேர்தல் இடம்பெறப்போகின்றது.  அரசாங்கத்தின் ஆதரவு  இருந்தால் மட்டுமே   ரணில் தரப்பில் உள்ளவர்களின் மீது சுமத்துப்பட்டுள்ள  நிதிக்குற்றச்சாட்டுகள்  மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் தளர்வு ஏற்படும்.  ரணிலை சமாளிப்பதற்கும் தனது புதிய கூட்டணியை தக்க வைக்கவும்  சஜித்துக்கும் ஒரு துருப்பு தேவையாகவுள்ளது.   தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என கூட்டணிக்கும் விளங்கி வருகின்றது.  பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 19 ஆவது சரத்தை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது .  இவை அனைத்துக்கும்  மையப்புள்ளியாகவே  பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.