உலகில் பற் சிகிச்சைக்காக உபயோகிக்கும் நவீன முன்னணி கருவிகள் தற்போது எமது நாட்டிலும் இருக்கின்றன. பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை முதல் எந்தவொரு பல் நோய்க்கும் சிகிச்சையளிக்க முடியுமாக இருக்கின்றது
எமது நாட்டில் 18க்கும் 26வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கே அதிகமாக பற்களில் பிரச்சினை ஏற்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. ஆகையினால் சகல வயதினரும் 6மாதங்களுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்தியர் ஒருவரை அணுகி பற்களை பரீட்சித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் கொட்டாஞ்சேனை பல் சிகிச்சை நிலையத்தின் ஸ்தாபகரும் இலங்கை பல் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் இலங்கை தனியார் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான வைத்திய நிபுணர் மீராஸ் முக்தார்.
பல் சுகாதாரம் தொடர்பாக அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு
கேள்வி: இலங்கையில் பல் சுகாதாரம் எந்த நிலைமையில் இருக்கின்றது?
பதில்: கடந்த காலத்தையும்விட நாட்டில் தற்போது பெரும்பான்மையான மக்கள் பல் சுகாதாரம் தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் ஊடகங்கள் இதுதொடர்பாக அதிகம் விழிப்புணர்வூட்டுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். முன்னர் பற்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை கழற்றி விடும் எண்ணத்துடனே பல் சிகிச்சை நிலையங்களுக்கு வருவார்கள். ஆனால் இப்போது அந்த முறை மாறியுள்ளது. பல் சிகிச்சை நிலையங்களுக்கு வருபவர்கள் பல்லை பிடுங்காமல் அதனை பாதுகாக்க முடியுமா என்றே கேட்கின்றனர்.
கேள்வி: எமது நாட்டில் பற்கள் தொடர்பான எவ்வாறான நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன?
பதில்: முரசு நோய், சூத்தை பல் மற்றும் பல் இத்துப்போதல் நோய்களே அதிகமாக இருக்கின்றன. விசேடமாக இந்த நோய்க்கு ஆளாவதற்கு பிரதான காரணம் மக்கள் இது தொடர்பாக அறியாமல் இருப்பதாகும். என்றாலும் தற்போது பற்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் பெற்றோருக்கும் தெளிவூட்டல்கள் இடம்பெறுகின்றன.
சிறுவயதிலிருந்தே பற்களை ஆரோக்கியமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பற்களில் பாதிப்பு ஏற்படும் முன்னரே வைத்தியரை நாடி பற்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி: பல்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதிகள் நாட்டில் இருக்கின்றதா?
பதில்: ஆம், நாட்டில் இருக்கும் சகல பிரதான வைத்தியசாலைகளிலும் பல் சிகிச்சை பிரிவு இயங்குகின்றது. இதற்கப்பால் சகல உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வைத்திய பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் உலகில் பற் சிகிச்சைக்காக உபயோகிக்கப்படும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் தற்போது எமது நாட்டிலும் இருக்கின்றன. பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை முதல் எந்தவொரு பல் நோய்க்கும் சிகிச்சையளிக்க முடியுமாக இருக்கின்றது.
முன்னர் பல் ஒன்று உடைந்தால் அல்லது பழுதடைந்தால் அதனை பிடுங்கி விடுகின் றோம். ஆனால் இப்போது பல் பிடுங்குவதில்லை. செயலிழந்த பல்லையும் சிகிச்சையின் மூலம் தொடர்ந்து வைத்திருக்க முடியும். அதேபோன்று முரசுகளை 'டிரில்' பண்ணியும் பற்களை பொருத்த முடியும். 75வயதையுடைய ஒருவருக்கு கூட முரசை டிரில் பண்ணி பற்கள் பொருத்தப்பட்டன. ஆனால் 3வருடங்கள் கடந்தும் அந்த பற்களால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
கேள்வி: வாய் நோய்களை தடுப்பதற்கான வழிவகைகள் எவை?
பதில்: புகைப்பிடித்தல், வெற்றிலை போடு தல் நிறுத்தப்பட வேண்டும். பற் தூரிகையின் மூலம் காலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும். ஏனென்றால் இரவில்தான் பக்ரீறியாக்கள் செயற்படுகின்றன.
எமது நாட்டில் 18க்கும் 26வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கே அதிகமாக பற்களில் பிரச்சினை ஏற்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. ஆகையினால் சகல வயதினரும் 6மாதங்களுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்தியர் ஒருவரை அணுகி பற்களை பரீட்சித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சூத்தைப் பற்கள் இருப்பவர்கள் அதனை அடைத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: வாய் நோயில் இருந்து பாதுகாப்பு பெற முடியுமான பற் பசைகளை எவ்வாறு அறிந்து கொள்வது?
பதில்: ப்லோரய்ட் அடங்கிய பற் பசை பாவிப்பதென்றால் மிகவும் நல்லது. என்றாலும் மத்திய, அனுராதபுரம், அம்பாறை, கதிர்காமம் மற்றும் லுனுகம்வெகர உட்பட உவர் நீர் தன்மை அதிகம் இருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ப்லோரய்ட் குறைந்த பற் பசை பாவிப்பதே நல்லது. ஏனென்றால் அந்த பிரதேச மக்களின் பற்களில் நிறமாற்றம் அதிகமாக ஏற்படுகின்றது. என்றாலும் தற்போது அந்த நிலைமையை தடுப்பதற்கான முறைகள் இருக்கின்றன.
கேள்வி: குழந்தைகளுக்கு பூச்சிப்பல் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பது?
பதில்: குழந்தைகளைப்பொறுத்தவரையில் பால் தான் பிரதான உணவாக இருக்கின்றது. காபோஹைதரேட் இதில் அதிகமாக இருக்கின்றது. பாலில் அதிக சத்து இருப்பதுபோலவே பல்லுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உணவுகள் பற்களில் தேங்கி நிற்பதாலும் பூச்சிப்பல் ஏற்படுகின்றது.
அத்துடன் குழந்தைகளை பராமரிப்பதில் தாய்மார்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். எனவே தாய்மார் குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்கும்போது அதனை வாயால் ஊதுவதால் தாய்மாருக்கு பூச்சுப்பல் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் உணவுப்பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்களை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் குழந்தைகள் பால்புட்டியில் பால் குடித்தவுடன் அப்படியே உறங்கிவிடுவார்கள். இதனால் காலப் போக்கில் பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே குழந்தைகள் பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரை குடிக்கச் செய்ய வேண்டும். இன்று அதிக உணவு வகைகள் இனிப்பு வகைகளாகவே இருக்கின்றன. அவற்றை உண்பதால், ஒரு மணிநேரத்துக்கு மேல் உணவு வகைகள் தங்கி இருப்பதால் பூச்சுப்பல் ஏற்பட காரணமாகின்றது.
கேள்வி: பற்களின் அமைப்பு ஒழுங்கற்றதாக இருப்பவர்கள் கிளிப் பாவிப்பதால் பற்களை சரி செய்துகொள்ளலாமா?
பதில்: ஆம், பற்கள் முன்பக்கம் நீண்டு இருப்பவர்கள் கிளிப் போடுவதால் அதனை சரி செய்து கொள்ளலாம். கிளிப் பொருத்தும்போது பற்களில் இடவசதி இல்லாமல் இருந்தால் முன்பக்கத்தில் கடவாய் பற்கள் இரண்டை நீக்கி விட்டு பொருத்துவதால் பற்கள் சரிவர வாய்ப்புள்ளது.
இந்த கிளிப்களில் நிரந்தரமானது. தற்காலிகமானது என இரண்டு வகைகள் உள்ளன. அதாவது, உணவு உண்ணும்போது நீக்கி பின்னர் பொருத்துதல் ஒன்று. மற்றையது நிரந்தரமான பல் கிளிப். குறிப்பிட்டகாலம் வரை நீக்காமல் பற்கள் உள்ளே சென்றதன் பின்னர் நீக்கக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் வயது எல்லை முக்கியமானதாகும். உதாரணமாக 13வயதுக்குட்பட்டவர்களுக்கு இலகுவில் பற்கள் சீராக அமையும். அதேவேளை 25வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருத்தினால் காலதாமதமாகவே பற்கள் சீராக அமையும்.
கேள்வி: பல் பிடுங்குவதால் பாதிப்புக்கள் ஏற்படுமா?
பதில்:பற்களை பிடுங்கினால் ஒரு மாதத்தில் இருந்து 6மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மேற்பற்கள் கீழே இறங்கவோ கீழ் பற்கள் மேலே ஏறவோ அல்லது பக்கவாட்டு பற்கள் சரிய வாய்ப்புள்ளது. இதனை தவிர்த்து எஞ்சிய பற்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொய்ப் பற்கள் பொருத்திக்கொள்வதுதான் சிறந்தது.
கேள்வி: இறுதியாக வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: பற்களை பாதுகாப்பதற்கும் அதனை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் சிறுவயது முதல் நாம் பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரின் முக அழகு அவரின் பற்களிலேயே தங்கியுள்ளது. சிறு வயதில் பல் பாதிக்கப்பட்டால் முக அழகு பாதிக்கப்படும். உண்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் பல் சொத்தையை கண்டு கொள்ளாவிட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்கச்செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடும். சொத்தை பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லை பாதுகாக்க முடியும்.
எனவே பல் சம்பந்தமாக 6மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் வைத்தியர் ஒருவரை அணுகி பற்களை பரிசோதித்துக் கொள்வதன் மூலம் இறுதிவரைக்கும் பற்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM