கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து முரண்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றன.

ஒருவகையில் கூறப்போனால் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற நிலையிலேயே அவை இருந்து வருகின்றன .

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் அந்த சட்ட நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் விலங்குகள் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக  சீனா கூறி வருகிறது.

ஆனால் சீனாவின் ஆய்வகங்களில்  இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது, வைரஸை கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்களுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு இருப்பதையும் ஏற்க முடியாது.

சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை, சர்வதேச சட்டங்களை, அமெரிக்கா மீறி நடப்பதாக  இது உள்ளது என் று சீனசெய்தி தொடர்பாளர்  நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலும், அல்லது ஏதேனும் பிரேரணையை கொண்டு வந்தாலும் அதை  சீனா கடுமையாக எதிர்க்கும், அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீன தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.

அமெரிக்கா முதலில் ஏனைய நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினையின் மீது கவனம் செலுத்தவேண்டும். 

அமெரிக்காவின் சட்ட நடவடிக்கைகளையும் ஏற்கமாட்டோம்.  இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அமெரிக்க - சீன முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு முடிவு காணத்வறும் பட்சத்தில் இது உலகளாவிய ரீதியில் சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இரு நாடுகளும் தமக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை பேசித் தீர்க்க முன்வர வேண்டும்,  அது வே இன்றைய தேவையாகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்