(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வதேச பூகோள அரசியலின் மையமாக  இந்துமா சமுத்திரம் மிக தீவிரபோக்குடன் இன்று  உருவெடுத்துள்ளது.

இந்த  பிராந்தியத்தின் நாடுகள் அனைத்தும் வல்லரசுகளின் அரசியல் களமாக கையாளப்படும் நிலையினையே  உணர முடிகிறது.  

அந்த வரிசையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  இலங்கை வல்லரசுகளின் பார்வையில் முதன்மை பிடித்துள்ளமையானது நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து பல்வேறு சந்தேகங்களை தற்போது தோற்றுவித்துள்ளன.

கொவிட் - 19 வைரஸ் தொற்றின் உலக தாக்கம் தீவிரமாக காணப்படும் இந்த நிலையிலும் அனைத்துலக அரசியல் கொந்தளிப்புகளின் தாக்கம் இலங்கை மீது  மிகுந்த தீவிர போக்கை ஏற்படுத்தி வருகின்றது.

இவ்வகையான அனைத்துலக அரசியல் கொந்தளிப்பு அலைகளுக்கு மத்தியில்  உறுதியானதொரு பொருளாதார இலக்கை அடைவது என்பது இலங்கைக்கு சவால்மிக்கதாகவே உள்ளது.

ஏனெனில் வல்லரசுகளின் அணுகுமுறைகள் வணிகத்தை மையப்படுத்தியதை விட பாதுகாப்பு இராஜதந்திரத்தை உள்வாங்கியதாகவே காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையால் தனி இலக்கை நோக்கி பயணிப்பது என்பது சாத்தியமற்றதாகும். 

மறுபுறம்  பிராந்திய நாடுகளின்  மூலோபாய தேவைகள், சர்வதேச வர்த்தகம்  , கடல்சார் இராஜதந்திரம் மற்றும்   இராணுவ தேவைகள் ஆகிய முக்கியத்துமிக்க  சாவால்களிலேயே இலங்கையின் நகர்வுகள்  சிக்குண்டுள்ளன.

இலங்கை , தெற்காசியாவின் ஒரு முக்கியமானதொரு  அலகாக இருக்கின்ற வல்லரசுகளின் போட்டித்தன்மைக்கு மத்தியில் தனது இலக்கை எவ்வாறு அடைய போகின்றது என்பது கேள்விக்குறிய விடயமாகும். 

குறிப்பாக கொழும்பு ,அம்பாந்தோட்டை  மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் பொருளாதார இராணுவ பலம் கொண்ட நாடுகள் மத்தியில் முக்கிய கவனத்தை ஏற்கனவே  ஈர்த்துள்ளது.

அம்பாந்தோட்டை மற்றும்  கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி  ஏற்கனவே சீன வல்லரசின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ளது. எனவே தான் எஞ்சியுள்ள திருகோணமலை மீதான பார்வை இன்று பல்வேறு வல்லரசுகள்  மத்தியிலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த பார்வையை எதிர்கொள்வதில்  இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஏனெனில் உள்நாட்டு அரசியலிலும் துறைமுகங்களை அந்நிய நாடுகளுக்கு கொடுப்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன.

இது ஆட்சியிலுருக்கும் அரசின் இருப்பை கேள்விக்குறியாக்கி விடும். மறுப்புரம் இந்தியா , அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ஆரோக்கியமானதொரு நிலைப்பாடு இருந்ததில்லை.

எனவே உள்நாட்டு அரசியல் சவால்களை எதிர்கொள்வது மாத்திரமின்றி வல்லரசுகளின் இலங்கை துறைமுகங்கள் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் இந்து சமுத்திர பிராந்திய அரசியலிலும் இதுவரையில் இலங்கையின் சில அணுகுமுறைகள் வெற்றி தருவதாகவே அமைந்துள்ளது.

அதாவது இந்தியா நோக்கிய பார்வையில்  கடற்பிராந்தியத்தின் எந்தப் பகுதியும் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றதொரு எழுதப்படாத உறுதிமொழி இலங்கை அரசின் மிக முக்கிய இராஜதந்திர அணுகுமுறையாகும்.

 

ஆனால் அம்பாந்தோட்டையை 99 வருட கால  குத்தகைக்கு கொடுத்துள்ள இலங்கை  கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடல் நோக்கி மண் இட்டு நிரப்பப்பட்டு  துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தின் கூடுதலான பங்குகளும் சீனாவிற்கு வழங்கப்பட்டு விட்டதால் தற்போது இலங்கை மீதான அந்த நம்பிக்கை எந்தளவு உள்ளது என்பது கேள்விக்குறியான விடயமாகும். 

இவ்வாறனதொரு பின்னணியில்  வல்வரசு நாடுகள் பலவும்  இலங்கை மீது காட்டும்  ஆர்வத்தை வர்த்தக பாணியில் கையாள கொழும்பு  மீண்டும் முற்படுகின்றது. 

வல்லரசுகளின் இலங்கை மீதான  பார்வை  பொருளாதார வணிக நோக்கத்தை விட கேந்திர முக்கியத்துவம் கொண்ட  இராணுவ மயமாக்கும் பார்வையையே  அதிகம் தோற்றுவிக்கின்றன. 

2009 ஆம் ஆண்டில் நாட்டில் போர் முடிவடைந்த பின்னரும்  பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்,  தேசிய நலன் என பல்வேறு விடயங்களை மையமாக கொண்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றை   பல நாடுகள் இலங்கைக்கு  வழங்கியுள்ளன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற  இராணுவ உதவிகள் இலங்கையின் இராணுவம்  , கடற்படை  மற்றும் விமானப்படைகளை வலுப்படுத்துவதில் வல்வரசுகளின் ஈடுப்பாட்டையே வெளிப்படுத்துகின்றன. 

இவ்வாறு அமெரிக்கா , சீனா மற்றும் இந்தியா என முக்கிய நாடுகள் இலங்கைக்கு பல்வேறு வகையில் பல்துறைசார் உதவிகளை வழங்குவதுடன் படைகள் ஒத்துழைப்புகளை மையப்படுத்திய ஒப்பந்தங்களையும் முன்னெடுத்துள்ளன. இவற்றில் இரு தரப்பு முப்படைசார் பயிற்சிகள் முக்கியமானதாகும். இவை வல்லரசுகளின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 

இராணுவ செல்வாக்கை கொண்டிருக்கம் இலங்கையின்  சமூக கட்டமைப்பும் பௌத்த சிங்கள தேசியவாத சித்தாந்தம் என்பன புதியதொரு தோற்றத்திற்கு தற்போது நாட்டை கொண்டு சென்றுள்ளது.

அந்தவகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு தேசமாக இலங்கை பரிணமித்துள்ள அதே வேளை , இலங்கை  வல்வரசுகளின் அரசியல் களமாகவும்  தற்போது மாறியுள்ளது. 

இந்த நிலையானது பன்னாட்டு இராணுவ பிரசன்னங்களுக்கு வழிவகுத்து விடும் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இலங்கை துறைமுகங்களின் பூகோள அமைவுகள் காணப்படுகின்றன.

எனவே எதிர்வரும் காலங்கள் இலங்கையின் துறைமுகங்களை மையப்படுத்திய வல்லரசுகளின்  தீவிர அணுகுமுறைகளை அவதாணிக்க கூடியதாக இருக்கும் அத்துடன் இவ்வகையான சவால்களில் இலங்கையின் அணிசேரா கொள்கைக்கும் சவால்மிக்கதொரு காலமாகவும் அமையும்.