-ஹரிகரன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருளை பயன்படுத்துவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் டிலான் பெரோரா வெளியிட்டுள்ள பகிரங்க கோரிக்கை, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம்.

ஏனென்றால், இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பவர், முன்னாள் அமைச்சர், ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர். அவர், இந்திய நிறுவனம் ஒன்றை நோக்கி முன்வைத்திருக்கின்ற இந்தக் கருத்து, தனியே வணிக ரீதியான விவகாரமாக மட்டும் பார்க்கக் கூடியதன்று.

அதற்கும் அப்பால், பிராந்திய அரசியல் மற்றும் அதனைச் சார்ந்த விவகாரங்களும் இதற்குள் உள்ளங்கியிருப்பதாகவே தெரிகிறது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அண்மையில் பெற்றோலின் விலையை லீற்றருக்கு 5 ரூபா உயர்த்தியது தான், இந்தப் போர்க்கொடி உயர்த்தப்படக் காரணம்.

இந்த நிறுவனம் ஏற்கனவே எரிபொருள் விலைகளை உயர்த்திய போது கண்டுகொள்ளாமல் இருந்த ஆளும்தரப்பு இப்போது மட்டும் எதற்காக போர்க்கொடி உயர்த்துகிறது?

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தான், கூடுதலான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்கிறது.

2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்தபோது, இலங்கையில் காலடி வைத்தது லங்கா ஐ.ஓ.சி நிறுவனம். இந்திய அரசுக்குச் சொந்தமான, இந்தியன் ஓயில் நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம் தான் இது.

இதற்கு இலங்கையில் 206 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தாலும், இலங்கையில் பிரதானமாக எரிபொருள் விற்பனையில் கோலோச்சுவது பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தான். இதற்கு நாடு முழுவதும் 850 விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் பெற்றோலியச் சந்தையில், ஐந்தில் நான்கு பகுதியை கைவசம் வைத்திருக்கின்ற போதும், லங்கா ஐ.ஓ.சியுடன் இலங்கை அரசாங்கம் மோதல்களை ஆரம்பித்திருக்கிறது.

இந்த மோதலுக்கான காரணம், பெற்றோலின் விலையை 137 ரூபாவில் இருந்து 142 ரூபாவாக அதிகரித்தது மாத்திரம் அல்ல. இந்த அதிகரிப்பினால், இலங்கைக்கு பெரிய நட்டம் வந்து விடப் போவதும் இல்லை.

ஏனென்றால், கூடுதல் விலைக்கு பெற்றோலை வாங்குவதை நுகர்வோர் தவிர்க்கவே முனைவார்கள், அது பெற்றோலியக் கூட்டுத்தாப்பனத்துக்கு தான் சாதகமானது. அதனை நோக்கியே நுகர்வோர் திரும்புவார்கள். ஆனால், இந்த விடயத்தை முன்னிறுத்தி, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தில் எரிபொருள் கொள்வனவு செய்வதை புறக்கணிக்குமாறு கோரியிருக்கிறார் டிலான் பெரேரா.

இந்த விலை அதிகரிப்பை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என்றும் அதனால் தான், அந்த நிறுவனத்தை புறக்கணிக்குமாறும் கோரியிருக்கிறார் அவர்.

ஐதேக அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு வலிமையானது மாத்திரமன்றி, இலங்கையினால் முரண்டு பிடிக்க முடியாத வகையிலும் அமைந்திருக்கிறது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஒரு சுதந்திரமான தனியார் நிறுவனமாக செயற்பட அந்த உடன்பாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் அந்த நிறுவனம் பெற்றோல் விலையை உயர்த்தியது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனத்தின் விலை அதிகரிப்பு சினமூட்டக் கூடிய ஒன்று தான். அந்தச் சினம் அளவுக்கு அதிகமாக இருப்பது தான் ஆச்சரியம்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோலின் விலையை அதிகரித்த போது அதனை தடுக்க அரசாங்கத் தவறி விட்டது என்று கூறி பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், அமைச்சர் மகிந்த அமரவீரவை கடுமையாக விமர்சிக்கின்றன.

லங்கா ஐ.ஓ.சியை அடுத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றும், அதனால் தான், அவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்றும் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

ஆனால் ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீற முடியாதுள்ளது என்று அமைச்சர் மகிந்த அமரவீர கூறியிருக்கிறார். அதனைச் சுட்டிக்காட்டியே லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்குமாறு கோரியிருக்கிறார் டிலான் பெரேரா.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள், அந்த நன்மையை தமது மக்களுக்கு கிடைக்க விடவில்லை.

மசகு எண்ணெய் விலை சடுதியாக உயரக் கூடும் என்பதால், எரிபொருள் விலைக் குறைப்பை தவிர்க்க இந்த நாடுகள் முற்படுகின்றன. தற்போது, நாட்டின் வருமான மூலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எரிபொருள் விலை குறைப்பை செய்தால், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் கணிசமாக பாதிக்கும்.

எனவே தான், விலைக்குறைப்புக்கு அரசாங்கம் பின்னடித்து வருகிறது, என்பதே உண்மை நிலை. இவ்வாறான நிலையில் லங்கா ஐ.ஓ.சி விலையை அதிகரித்து புதிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.

கொரோனா தொற்றை அடுத்து திருகோணமலை சீனக்குடாவில் லங்கா ஐஓசியின் வசம் உள்ள எண்ணெய் தாங்கிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவற்றை தம்மிடம் தருமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

சீனக்குடாவில் உள்ள பிரித்தானியரால் கட்டப்பட்ட .இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய்த் தாங்கிகள் அதிக பெறுமானம் கொண்டவை. அதனை ஐ.தே.க அரசாங்கம் இந்திய அரசுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டது. அதனை எப்படியாவது மீளப் பெறுவது தான் தற்போதைய அரசாங்கத்தின் திட்டம்.

ஆனால், சர்வதேச ரீதியாக செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீறி அதனை மீளப் பெற்றுக் கொண்டால் இலங்கையின் பொருளாதார மதிப்பு பாதிக்கப்படும். நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் எனவே தான், இந்தியாவிடம் இருந்து எண்ணெய் தாங்கிகளை மீளப்பெற முயன்றது அரசாங்கம்.

கொரோனா சூழல், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றினால், அதிகளவு எண்ணெய் கையிருப்பை வைத்திருப்பதற்காக, இந்த எண்ணெய் தாங்கிகளை திரும்பத் தருமாறு கேட்டது இலங்கை அரசாங்கம்.

அதுகுறித்து பேச்சுக்களும் நடத்தப்பட்டன. ஆனால், சீனக்குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகளை திருப்பிக் கொடுக்க முடியாது என்று இந்தியா கூறி விட்டது, இது இலங்கை அரசாங்கத்துக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இந்தச் சூழலில் தான், லங்கா ஐஓசியின் எரிபொருளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்க முனைகிறது அரசாங்கம். ஆனால், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இதற்கெல்லாம் மசிந்து கொடுக்கும் போலத் தெரியவில்லை.

ஏனென்றால் இந்த நிறுவனம் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான நிலையங்களை கொண்டிருக்கிறது. அவ்வாறான ஒரு நிறுவனத்துடன் அரசாங்கம் முரண்டு பிடிக்கத் தொடங்கியிருப்பது ஆச்சரியம் தான். அதுவும், ஆளும்கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவர், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றுக்கு எதிராக இவ்வாறான போரைத் தொடுப்பதென்பது அசாதாரணமானது.

சீன முதலீடுகளுக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று யாரும் கோரவில்லை. டிலான் பெரேராவின் அறிவிப்பு, 1987-89 காலகட்டத்தில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று ஜே.வி.பி கொடுத்த அழுத்தங்களை நினைவுபடுத்துகிறது.

இந்திய அரசு நிறுவனம் ஒன்றுக்கு எதிராக அரசாங்கத் தரப்பிலுள்ள ஒருவர் விடுத்திருக்கின்ற இந்த எச்சரிக்கையை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.

இவ்வாறான நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தை பெரும்பான்மையான சிங்கள மக்கள் புறக்கணித்து, அதன் வருமானம் பாதிக்கப்பட்டு நட்டம் ஏற்பட்டாலும் கூட அந்த நிறுவனம் இலங்கையில் இருந்து ஓடி விடப் போவதில்லை.

ஆனால், அவ்வாறு மூடப்பட வேண்டும், நாட்டை விட்டு ஓட வேண்டும் என்றே தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதற்கு, இந்திய அரசாங்கம் அனுமதிக்காது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது இந்தியாவுக்கே அவமானத்தை ஏற்படுத்தும். அதைவிட, லங்கா ஐஓசி நிறுவனம் இயங்கினால் தான், சீனக்குடாவில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியா தக்க வைத்திருக்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இப்போது, இலங்கையுடனான முரண்பாடுகளோ, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் மூலம் கிடைக்கக் கூடிய இலாபமோ முக்கியமல்ல. இந்தியாவுக்கு திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் தான் முக்கியம்.

அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்தியா எதையும் செய்யும் என்பதை, டிலான் பெரேரா போன்றவர்கள் உணராமல் இருப்பது தான் ஆச்சரியம்.