-சத்ரியன்

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும், தற்போதைய நிலைமைகளைச் சமாளிப்பதற்கான வழிகளை நாடாளுமன்றத்தின் ஊடாக தேட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில், - நாடாளுமன்றத்தைக் கூட்டினால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவார்கள், ஜனதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வருவார் என்று உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள், நாட்டு மக்களை நம்ப வைப்பதற்கு கடுமையாக முயன்று கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், கொரோனா வைரஸ் தொற்றினால், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாமல் போனது. அதற்குப் பின்னர், ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரம் காட்டினாலும், எதிர்க்கட்சிகள் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன.

அதுபோலவே அரசாங்கமும், எத்தகைய நிலையிலும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது உண்மை. அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தயாராக இல்லை.

சிலவேளைகளில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ, அல்லது அறுதிப் பெரும்பான்மையே தற்போதைய அரசாங்கத்துக்கு இருந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாணியில் முடிவெடுத்திருப்பார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச. 1977ஆம் ஆண்டு தேர்தலில் ஐதேகவுக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை – அதாவது 140 ஆசனங்கள் கிடைத்திருந்தன. அப்போது வெறும் எட்டு சனங்களுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து போயிருந்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.

18 ஆசனங்களைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியே பிரதான எதிர்க்கட்சியாக வந்தது. இதனைப் பயன்படுத்தி, 1978ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பைக் கொண்டு வந்திருந்தார் ஜே. ஆர்.ஜெயவர்த்தன. அது தான் அவருக்கு சர்வ அதிகாரங்களையும் கொடுக்கும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைக் கொடுத்தது.

அதுமாத்திரமன்றி, 1982ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தபோது, ஜேஆர்.ஜயவர்த்தன, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தவில்லை. அதற்குப் பதிலாக, தன்னிடம் இருந்த நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு, நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி கோரும், சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

அந்த வாக்கெடுப்பில், ஜேஆர்.ஜயவர்த்தனவுக்கு 54.66 வீதமான வாக்குகள் ஆதரவாக கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதால், 1977இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே, 1988 இறுதி வரை பதவியில் இருந்தார்கள்.

இதுபோன்றதொரு வழியை தற்போது கையாளுவதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி கருதும், ஒரு விடயத்தை பற்றி, மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக, சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பொறுத்தவரையில், அவ்வாறான ஒரு சர்வஜன வாக்கெடுப்குபுக்கு உத்தரவிடுவதற்கு, இப்போதுள்ளதை விட வேறு பொருத்தமான சூழல் வேறு இல்லை.

ஏனென்றால், நாட்டில் தேர்தலை நடத்த முடியாதளவுக்கு, நோய்த் தொற்றும் அச்சுறுத்தலும் இருக்கிறது. இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை கோருவது உசிதமானதே.

ஏனென்றால், அதற்கு வேட்பாளர்கள் தேவையில்லை, அவர்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. பிரசாரத்துக்கு அதிக காலமும் தேவையில்லை. அதிக செலவும் ஏற்படாது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறானதொரு சர்வஜன வாக்கெடுப்பை ஒருபோதும் கோராது. ஏனென்றால், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் கூட, அதற்கு இல்லாத போது, எவ்வாறு அந்த நாடாளுமன்றத்தை நீடிப்பதற்கு, மக்களின் ஆணையைக் கோர முனையும்?

சாதாரணமாக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை – அதன் பதவிக்காலம் முடியும் வரை அதாவது செப்ரெம்பர் வரை கூட்டுவதற்கே அரசாங்கம் தயங்குகிறது. ஏனென்றால், நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்புக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வரும் என்றெல்லாம் அரசாங்கத் தரப்பினர் கலங்குகிறார்கள் என்பது மிகையான கருத்து.

ஏனென்றால், தற்போதைய சூழ்நிலையில், எந்தக் கட்சியும் ஆட்சியை குறுக்கு வழியில் பிடிப்பதற்கு முற்படாது. ஏனென்றால், இந்த நெருக்கடியான சூழலை சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்தினால் அது மக்கள் மத்தியில் எதிர்மறையான விம்பத்தையே ஏற்படுத்தும் என்பது, அவர்களுக்குத் தெரியும். இவ்வாறானதொரு அனர்த்த சூழலைக் கூட அரசியல் இலாபத்துடன் அணுகுகிறார்கள் என்ற முத்திகை குத்தப்படுவதை எதிர்க்கட்சிகள் விரும்பாது.

எனவே, நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப்படும்,, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வரப்படும் என்பதெல்லாம் வீணான கற்பனையே. ஐதேக அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க விரும்பியிருந்தால், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் இருந்திருக்க முடியும். ஜனாதிபதி தேர்தலில் அவரை நீக்குவதற்கு மக்கள் ஆணை கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐதேக அரசாங்கம் தார்மீக அடிப்படையில் பதவி விலகி, மகிந்த ராஜபக்ச தலைமையிலான பெரும்பான்மை பலமில்லாத ஒரு அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு இடமளித்தது.

அவ்வாறான ஒரு கட்சி, தற்போது – அதுவும், நாடு பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து வெளியே வழியற்றிருக்கும் போது, ஆட்சியைப் பிடிக்க குறுக்குவழியில் முயற்சிக்குமா?

நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், எதிக்கட்சிகள் அதிகாரத்தைப் பிடித்து விடும் என்று கூறப்படுவதை விட, எதிர்க்கட்சிகள் மக்களின் அபிமானத்தைப் பெற்று விடும் என்ற அச்சமே அரசாங்கத்துக்கு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், 7 எதிர்கட்சிகளின் தலைவர்களும், நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரமாட்டோம் என்றும், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழற்குவோம் என்றும் எழுத்து மூலம் உறுதி அளித்திருந்தனர்.

அவ்வாறான ஒரு நிலையில், அந்த வாக்குறுதிக்கு முரணான வகையில் எதிர்க்கட்சிகள் செயற்படுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இருக்காது. நாடாளுமன்றத்தைக் கூட்டினால், தற்போதைய நெருக்கடிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து விட்டு அதற்கு மாறாக செயற்பட முடியாது.

அவ்வாறு ஒத்துழைப்பு கொடுத்தால் எதிர்க்கட்சிளுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடும் என்ற பயம் தான் அரசாங்கத்துக்கு அதிகம். அதைவிட, நாடாளுமன்றத்தைக் கூட்டினால் ஜனாதிபதி தற்போது கொண்டிருக்கும் அதிகாரங்கள் பலவற்றை இழக்க நேரிடும்.

அவ்வாறு செய்தால், பல விடயங்களில் அவரால் தனித்துத் தீர்மானங்களை எடுக்க முடியாது கொரோனா ஒழிப்பிலும், நிலைமையைச் சமாளிப்பதிலும் தாங்களே முழுவதுமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. அதில் பங்காளிகளாக எவரும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

இவ்வாறான ஒரு மனோநிலையில், இருக்கின்ற அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தயங்குவதில் ஆச்சரியம் இல்லை. உண்மைக் காரணத்தை மறைப்பதற்காக அரசாங்க தரப்பு பொய்யான காரணங்களை சொல்லி, மக்களை முட்டாள்களாக்க முனைகிறது.

மக்களுக்கு அந்த உண்மை தெரியும் என்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பது தான் அதன் அறிவீனம்.