தண்டனை விலக்கீட்டுக் கலாசாரப் பிரகடனம்

23 May, 2020 | 09:25 PM
image

பி.மாணிக்கவாசகம்

தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் என்பது இலங்கை அரசியலில் பின்னிப் பிணைந்திருக்கின்றது. பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. தண்டனை பற்றி பேசுவதே அரசியல் நெறிமுறையில் பாவமாகக் கருதுகின்ற ஒரு போக்கு இதனால் உருவாகி இருக்கின்றது. பாவம் மாத்திரமல்ல. அதுவே சகிக்க முடியாத ஒரு குற்றமாகவும் நோக்கப்படுகின்றது.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. இதனை பேரின ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். அதன்படி ஒழுகவும் செய்கின்றார்கள். அந்த வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, மீறுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். இந்த முக்கிய கடமையைப் பொலிசாரும், மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநாட்டி வருகின்றன.

ஆனால் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் என்பது சாதாரண குற்றங்களைப் புரிபவர்களுக்கல்ல. அது பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு உரியது. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் மனித உரிமை மீறல்களிலும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கும் அவர்களை வழிநடத்தியவர்களுக்கும் உரியதாகும்.

இந்தத் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் என்பது அரசியல் ரீதியானதோர் அனுகூலமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் என்பதிலும் பார்க்க, ஆட்சியாளர்கள் அதனை ஒரு தண்டனை விலக்கீட்டு உரிமையாகவே வகுத்துச் செயற்படுத்தி வருவதைக் காண முடிகின்றது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த இலங்கை அரசுகள், அவர்களுக்கு எதிராக அதீத பலப்பிரயோக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த அதீத பலப்பிரயோகம் என்பது சாதாரண உள்நாட்டு இராணுவ பலப்பிரயோக எல்லையைக் கடந்திருந்தது. பல வெளிநாடுகளின் இராணுவ ரீதியான உதவிகளையும் உள்ளடக்கி அது பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது விசேட கவனத்திற்கு உரியது.

ஐ.நா.வில் இறுகியுள்ளது

பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உள்நாட்டுப் போராளிகள். இந்த நாட்டின் குடிமக்கள். பேரின ஆட்சியாளர்களினால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அவர்கள் ஆயுதமேந்தி இருந்தார்கள். அது ஓர் உள்நாட்டு ஆ,யுதக் கிளர்ச்சி. ஓர் உள்நாட்டு ஆயுதப் போர்.

முப்பது வருடங்களாக நீடித்திருந்த அந்த ஆயுதக் கிளர்ச்சிக்கு – ஆயுதப் போருக்கு இனப்பிரச்சினையே அடிப்படைக் காரணம் என்பதை ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை. அந்த அடிப்படைப் பிரச்சினைக்கு அரசியல் வழியில் விட்டுக் கொடுப்புடன் கூடிய பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு கண்டிருக்க வேண்டும்.

ஆனால் பிரச்சினைக்கு அடிப்படையான இனப்பிரச்சினையை ஒரு பிரச்சினையாக அடையாளம் காணவே அவர்கள் தயாராக இல்லை. இதனால் அரசியல் வழியில் தீர்வு காண்பதைக் கைவிட்டு, ஆயுத வழியில் அடக்கி ஒடுக்கி அரசியல் உரிமைகளுக்கான கோரிக்கையை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளிலேயே அரசுகள் செயற்பட்டிருந்தன.

ஆட்சியாளர்களின் இந்த அணுகுமுறையே நாட்டில் முப்பது வருடங்களாக ஓரு யுத்தம் தொடர்வதற்கு வழிவகுத்திருந்தது. முப்பது வருடங்களின் பின்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்களால் முடியவில்லை. அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவும் முயற்சிக்கவில்லை.

 இதனால் முப்பது வருடங்களின் முடிவிலும் ஆயுத ரீதியான பிணக்குக்கு வழிவகுத்திருந்த பிரச்சினை அதன் ஆரம்பப் புள்ளியில் இருந்து அசையவே இல்லை. மீண்டும் பூஜ்ய நிலையில் நிற்க வேண்டிய நிலைமைக்கே நாடு ஆளாகியிருக்கின்றது.

அது மட்டுமல்ல. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரச படைகள், யுத்த காலத்தில் பயன்படுத்திய அதீத இராணுவ பலப் பிரயோகத்தினால் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள் என்ற பாரதூரமான குற்றங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துவிட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டிலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச அளவிலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மனித நேய சக்திகள் என்பனவும் இந்தச் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. இதனால்தான் போர்க்கால உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இது தொடர்பில் பிரரேரணைகள் நிறைவேற்றப்பட்டு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து விலக முடியாத நிலையில் அரசு இறுகிப் போயிருக்கின்றது.

'பொறுப்பு கூறப் போவதில்லை........ குற்றச்சாட்டவும் முடியாது......'

ஆனால் யுத்தகாலத்தில் அரச படைகள் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. அங்கு மனித உரிமை மீறல்களோ மனிதாபிமான சட்டமீறல்களோ இடம்பெறவில்லை என்று அரசு அடித்துக் கூறுகின்றது. பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே அரச படைகள் ஈடுபட்டிருந்தன. அங்கு இடம்பெற்ற யுத்தம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவுமில்லை என்றே அராசங்கம் நியாயப்படுத்துகின்றது.

இந்த நியாயப்படுத்தலின் அடிப்படையில்தான் இராணுவத்தினர் எவரையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று ராஜபக்ஷக்கள் கர்ச்சித்திருந்தார்கள். பேச்சளவில் அவர்கள் நிற்கவில்லை. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் மறு நாளே குற்றஞ்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்வேன் என தேர்தல் காலத்தில் கோத்தாபாய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்றதும், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த இராணுவத்திற்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டன.

குற்றச் செயல்கள் தொடர்பில் இராணுவத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்டன. புலனாய்வுத் துறையில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் இராணுவத்தினருக்கான விசேட உரிமையாக இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் அதிகாரபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசு அத்துடன் நிற்கவில்லை. ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பொறுப்பு கூறல் தொடர்பான பிரேரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அரசு அறிவித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்டிருந்த அந்தப் பிரேரணைகளில் இருந்து வெளியேறுவதாகவும் அது அறிவித்தது.

இத்தகைய பின்புலத்தில்தான் 11 ஆவது யுத்த வெற்றிதினம் மே 19 ஆம் திகதி கொண்டாடப்பட்டபோது, இராணுவத்திற்கு எதிராக அடிப்படையற்ற வகையில் எவரேனும் குற்றம் சுமத்தினால், அந்த அமைப்பில் இருந்தும், அத்தகைய நிறுவனங்களில் இருந்தும் இலங்கை வெளியேறிவிடும் என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபகஷ அதிரடியாக அறிவித்திருந்தார்.

அவருடைய இந்தக் கூற்று உள்நாட்டு அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சங்கடத்துடன் கூடிய சீற்றத்திற்கு உள்ளாக்கியது.

இராணுவத்தினரை நீதியின் முன் நிறுத்தினால், அல்லது அவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தினால் அத்தகைய நிறுவனங்களில் இருந்து நாட்டை விலக்கிக் கொள்வேன் என்று ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ ஐநா மனித உரிமைகள் பேரவையை மனதில் கொண்டே கூறியிருக்கின்றார் என்பதே பொதுவான கணிப்பு.

“பாதகமாக அமையலாம்'

யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களுக்கும் பொறுப்பு கூறுவதாக சர்வதேச அரங்கில் ஒப்புக்கொண்ட அரசாங்கம் அந்தக் கடப்பாட்டில் இருந்து இலகுவில் வெளியேற முடியாது. ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அறிவித்தபோது, அந்தப் பேரவை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினால் ஐநா மனித உரிமை ஆணையகமும், உறுப்பு நாடுகளும் வெளிப்படையாகவே தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. அவர்களின் எதிருணர்வு, அதிருப்தியையும் கடந்த உணர்வ நிலைமையொன்றையே தொனி செய்திருந்தது.

பொறுப்பு கூறுகின்ற விடயத்தில் ஏற்கனவே சர்வதேசத்தின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள அரசு போர்க்குற்றம் பற்றி பேசக்கூடாது. பேசினால் அந்த அமைப்புக்களில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று விட்டேத்தியான போக்கில் கூறியிருப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்கவே வழி வகுத்துள்ளது.

மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்ற வகையிலான குற்றச்சாட்டுக்கள் ஐநா மனித உரிமைப் பேரவை என்ற சர்வதேச அரங்கிலேயே அழுத்தம் திருத்தமாக முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

பிரேரணை நிலையிலான – முன்மொழிவு நிலைமையில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துவதாக இலங்கை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தது. அந்த ஒப்புதலின் அடிப்படையிலேயே ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியது. பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. அந்தப் பிரேரணைகளின் அடிப்படையில் பொறுப்பு கூறுவதற்காக இரண்டு தடவைகள் கால அவகாசமும் கேட்டு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நோக்கி உங்களுடைய நடவடிக்கைகளுக்கு உட்பட முடியாது. நடவடிக்கை எடுத்தால் உங்கள் அமைப்புக்களில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று மிரட்டல் பாணியில் அரசு கருத்து வெளியிட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல என்பதே ராஜதந்திரிகள் மட்டத்திலான கருத்து.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தனது உரையில் ஐநா மனித உரிமைகள் பேரவையையும், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையுமே குறிப்பிட்டிருப்பார் என்று கருதுகிறேன் என கூறியுள்ள ஜெனிவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தாமரா குணநாயகம் அது இலங்கைக்குப் பாதகமாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறுவது என்பது இலகுவான காரியமல்ல. ஏற்கனவே அந்தப் பேரவையின் பிரேரணைகளில் இருந்து வெளியேறுவதாக அரசு கூறியதை அந்தப் பேரவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐநாவில் இருந்து வெளியேறுவதாகக் கூறியிருப்பது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகி இருக்கின்றது.

ஐநாவின் வல்லமை

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவின் இராணுவ வெற்றிதின உரை சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது. அவருடைய பிடிவாதப் போக்கிலான கருத்துக்கள்  இராஜதந்திர வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்த முக்கியத்துவமும், கவனயீர்ப்பும் இலங்கை பற்றிய நேர்விரோதமான எண்ணப்பாட்டிற்கே வழியேற்படுத்தி இருக்கின்றன என்றே இராஜதந்திர வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவத்தினர் ஏற்கனவே ஆளாகியிருக்கின்றார்கள். அந்த சந்தேகப் பார்வையில் இருந்து அவர்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தாமரா குணநாயகத்தின் கூற்று கவனத்திற்கு உரியது. முக்கியத்துவம் பெறுகின்றது.

'யுத்தவீரர்களைக் காப்பாற்றுவதற்கு சர்வதேச ஆதரவு அவசியமாகியுள்ள தருணத்தில் ஐநா அமைப்புக்களில் இருந்து விலகுவது இலங்கைக்குப் பாதகமானதாக அமையலாம்' என்றும்  'ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உறுப்புரிமை பெறவில்லை. பார்வையாளர் என்ற அந்தஸ்தை மட்டுமே அது கொண்டிருக்கின்ற நிலையில் நான் விலகிவிடுவேன் என கூறுவதற்கே இடமில்லை. அத்துடன் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கட்டமைப்பும் வித்தியாசமானது' என அவர் கூறியுள்ளார்.

ஐநா மன்றம் என்பது மிகப் பெரிய சர்வதேச அமைப்பு. அதனுடைய ஒரு பகுதிதான் ஐநா மனித உரிமைகள் பேரவை. அது, ஐநா மன்றப் பொதுச்சபையின் ஒரு துணை அமைப்பு. ஏனெனில் மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர்களை ஐநா பொதுச்சபையே தெரிவு செய்கின்றது. ஆனால் அந்தப் பேரவையில் இலங்கை உறுப்புரிமை பெற்றிருக்கவில்லை. அதனால் எந்தவிதமான உரித்தையும் கொண்டிருக்கவில்லை.

ஆகவே ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவது என்பது ஐநா மன்றம் என்ற அந்தப் பெரிய நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவே இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஐநா மன்றத்தில் இருந்து இலங்கை வெளியேறுவது என்பது அறிவார்ந்த செயற்பாடாக இருக்காது என்பதையும் தாமரா குணநாயகம் தொனி செய்திருக்கின்றார். ஏனெனில் பன்மைத் தன்மை பலதரப்பு என்ற அம்சத்தைப் பாதுகாப்பதற்கான ஐநா சாசனத்தை ஐநா மன்றமே உள்ளடக்கியிருக்கின்றது. அதற்காகச் செயற்படக்கூடிய வல்லமை பெற்றதும் ஐநா மன்றமே

விபரீத சிந்தனை

பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் இராஜதந்திரப் பிடியில் இருந்தும், வல்லரசுகளின் நலன் சார்ந்த வியூகங்களில் இருந்தும் இலங்கை போன்ற சிறிய நாடுகளைப் பாதுகாப்பதும், அவற்றின் தனித்தன்மையைப் பேணுவதற்கு உதவுவதும் ஐநா மன்றமே. அத்தகைய அமைப்பில் இருந்து விலகினால் அல்லது விலகுவது என்பது, இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க முத்தாக விளங்குகின்ற இலங்கைக்கு நன்மை தருவதாக அமையமாட்டாது.

'இலங்கை போன்ற காலனித்துவ நாடுகளின் இறைமை மீதான வெளிச்சக்திகளின் ஆக்கிரமிப்பு, அத்துமீறல், யுத்தம் என்பவற்றில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஒரேயொரு ஒழுங்கமைப்பைக் கொண்டதாக ஐநா மன்றம் திகழ்கின்றது. எனவே, எங்களைப் போன்ற வல்லாண்மை குறைந்த நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கக்கூடியதோர் உலகளாவிய அந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது.....' என தாமரா குணநாயகம் கூறியுள்ளார்.

அரசியல் நலன்களுக்காக எதனையும் கூறலாம். எப்படியும் நடந்து கொள்ளலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. இனவாத போக்கினால் ஏற்கனவே நாடு மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பது வருடகால யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்தும், அதன் ஆழமான வடுக்களில் இருந்தும் நாடு இன்னும் தலை நிமிர்த்தவில்லை.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எண்ணற்ற காரியங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் இன ஐக்கியத்தையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் கட்டி எழுப்ப வேண்டியது தலையாய கடமையாகும்.

பூகோள ரீதியில் அளவில் சிறியது என்ற காரணத்தினால் நாடு ஒருமைப்பட்டிருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் ஒற்றையாட்சி என்ற ஒரே இனம், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற ஒற்றையாட்சித் தன்மை நாட்டிற்கு நன்மையளிக்க மாட்டாது.

பல இனங்களும், பல மதங்கைளப் பின்பற்றுகின்ற பல சமூகங்களும் வாழ்கின்ற நாடு இது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அனைவரும் இந்த நாட்டின் மக்களே என்ற உரிமையுடனும் உரித்துடனும் வாழ்வதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பதும், அத்தகைய இலக்கை நோக்கி பயணிப்பதுமே நாட்டிற்கு நன்மை தரும்.

பிழைகள் விடலாம். குற்றங்கள் புரியப்படலாம். அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் அவற்றைக் கையாள்வது அவசியம். குற்றங்களை எற்க மறுத்து தண்டனை விலக்கீட்டை உரிமையாகப் பிரகடனப்படுத்தி மேலும் மேலும் குற்றங்கள் இழைப்பதற்கு வழிசெய்வது ஒருபோதும் நன்மையளிக்கமாட்டாது. 

குற்றங்கள் எத்தகையதாகவும் இருக்கலாம், குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வது நல்லியல்பாகும். இந்த இயல்பு ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆறச்செய்யும். நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த வழி செய்யும்.

வெறுமனே தண்டனை விலக்கீட்டு உரிமையைப் பிரகடனம் செய்வதும், அதன்படி நடக்கப் போவதாக எச்சரிப்பதும் நாட்டுக்கு நல்லதல்ல. நன்மை பயக்கவும் மாட்டாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right