ட்ரம்ப் வழியில் கோத்தா...

Published By: J.G.Stephan

23 May, 2020 | 08:28 PM
image

இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார்.



இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் போர் வெற்றி விழா பெரியளவில் தான் கொண்டாடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய முதலாவது போர் வெற்றி நாளை இன்னமும் சிறப்பாக கொண்டாடுவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கனவாகவும் இருந்தது.

போருக்கு தலைமை தாங்கியவர் என்று கருதப்படும் அவர், ஜனாதிபதியாக உள்ள நிலையில், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.

கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் நினைத்தவாறு பிரமாண்ட வெற்றிக்களிப்புகள் கொண்டாட்டங்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும், கொரோனாவுக்குப் பின்னர், தொற்று பரவத் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து, முதலாவது பாரிய அரசாங்க நிகழ்வாக இது அமைந்திருந்தது.




அதற்கு முந்திய நாள், முள்ளிவாய்க்காலிலும், வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதை தடுப்பதில், படையினரையும், பொலிசாரையும் அரசாங்கம் முழு வீச்சியில் பணியில் ஈடுபடுத்தியது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றைத தடுப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும். உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது.

எனினும், அதனை விட பெரியளவிலானதாக, அரசாங்க நிகழ்வாக, இந்த போர் வீரர் நாள் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்காலில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தின் போர் வீரர் நாள் நடந்த இடம், கொரோனா ஆபத்து அதிகம் உள்ள, இன்னமும் ஊரடங்கு நீக்கப்படாத பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியிருந்தும், அரசாங்கத்தின் ஏற்பாடு என்பதால், இராணுவத்தினரை நினைவு கூரும் அந்த நிகழ்வு சாத்தியமானது, ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் விட்டுப் போகவில்லை- இந்த நிகழ்வுக்கான அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற இரண்டு கடற்படையினருக்கு தொற்று கண்டறியப்பட்டது.


இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிலும் பலருக்கு தொற்று ஏற்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அதனை சார்ந்த சுகாதார விதிமுறைகளைப் புறக்கணித்தே, போர் வீரர் நாள் நிகழ்வுகளை அரசாங்கம் நடத்தியிருந்தது.

இந்த நிகழ்வுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வழக்கம் போலவே சிவில் உடையில் தான் வந்திருந்தார். இராணுவ சேவையில் இருந்த போது பெற்றிருந்த விருதுகள், பதக்கங்களையும் தனது சட்டையில் அணிந்திருந்தார்.
ஏற்கனவே, கடந்த பெப்ரவரி மாதம் நடந்த சுதந்திர தின விழாவிலும். இதேபோன்று தான், அவர் விருதுகளை சிவில் உடையில் அணிந்திருந்தார்.



அது அப்போது கடுமையான விமர்சனங்களை எற்படுத்தியிருந்தது. இராணுவ விருதுகளை சிவில் உடையில் அணிந்திருப்பது கோமாளித்தனம் என்ற தொனியில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சனம் செய்திருந்தார். இம்முறை போர் வீரர் நாள் நிகழ்வில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை. போரில் நேரடியாக தலைமை தாங்கிய அவர், இதுவரை நடந்த பெரும்பாலான போர் வெற்றி விழாக்களில் பங்கேற்க முடியவில்லை.

போர் முடிந்ததும், அவர் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டார். அதனால் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இராணுவத்தில் இருந்தபோது பெற்ற விருதுகள், பதக்கங்கள் பறிக்கப்பட்டன. அதனால் 2014 வரையான காலத்தில் அவர் போர் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட விருதுகள், பதக்கங்கள், மீளக் கொடுக்கப்பட்டு பீல்ட் மார்ஷல் பதவியும் அளிக்கப்பட்டது.


இந்தமுறை அவருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஆனால், தனக்கு வேறு நிகழ்வுகள் இருப்பதாக கூறி பங்கேற்க மறுத்து விட்டார் சரத் பொன்சேகா. ஒரு பீல்ட் மார்ஷலான தன்னை, லெப்.கேணலுக்கு மரியாதை செலுத்த வைக்க முயன்றனர் என்றும், அவ்வாறு தாம் ஒரு போதும் மரியாதை செலுத்தப் போவதில்லை என்றும் சரத் பொன்சேகா கூறியதாக தகவல். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒரு லெப்.கேணல் தர இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், போர் முடிவுக்கு வந்த போது கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொடவும் மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ரொஷான் குணதிலகவும், இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் தான், நாட்டுக்கும், படையினருக்கும் எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை கடுமையாக எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி.
இவ்வாறு தமது படையினரைக் குறிவைத்தால், அந்த அமைப்புகளில் இருந்து விலகிக் கொள்வதற்கும் தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட, தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என தெளிவாக தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.” என்று கூறி விட்டே, அவ்வாறான அமைப்புகளில் இருந்து வெளியேற தயங்கப் போவதில்லை என்ற செய்தியை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் ஆகியோரே, வெளிநாடுகளில் குற்றமிழைத்த படையினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்கள். அவர்களின் வழியிலேயே தாமும் செல்லப் போவதாக உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. இதன் மூலம், போர்க்குற்றங்களுக்கு நீதி, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும், அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு செக் வைப்பதற்கு முயன்றிருக்கிறார் அவர். கடந்த பெப்ரவரி மாதம், போர்க்குற்றசாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவையும் அவரது குடும்பத்தினரையும், அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்திருந்தது ட்ரம்ப் நிர்வாகம்.
இது கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட முதலாவது கடும் நடவடிக்கையாக இருந்தது.

அதற்குப் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் வந்த போது, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக, பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக கூறி விட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்றும் கூறியிருந்தது.

இவ்வாறான நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை அரசாங்கத்துக்காக காலக்கெடு முடிவடையப் போகிறது. அதற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி உள்ளது.
பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், எப்படியும், ஜெனிவா களத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதனைக் கருத்தில் கொண்டு தான், படையினருக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகிக் கொள்ளவும் தயங்கப் போவதில்லை என்று எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி. இவ்வாறான எச்சரிக்கையை எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை வெளியிட்டதில்லை. கோத்தாபய ராஜபக்ச கடும்போக்காளர் என்பதை இதன் மூலம் மீண்டும் சர்வதேச சமூகத்துக்கு கூற முனைந்திருக்கிறார். அவரது இந்த நிலைப்பாடு உள்நாட்டில் படையினருக்கும், சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கு அவ்வாறான ஒரு சமிக்ஞையை காட்டியிருக்காது.

இலங்கை ஆபத்தான ஒரு பாதையில் பயணிக்க முனைகிறது என்ற செய்தி தான் அவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தியின் ஆழத்தை ஜனாதிபதி புரிந்து கொள்ளாமல் வெளியிட்டிருக்கமாட்டார். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வேலையை மேற்கொண்டிருந்த தாமரா குணநாயகம், ஜனாதிபதியின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை கூறப்பட்டிருப்பதாகவும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறும் முடிவை அறிவிக்கவும் தற்போதைய அரசாங்கம் தயங்காது என்பதே, ஜனாதிபதியின் உரையில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வாறு தான் பெரும்பாலானவர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
அத்தகைய ஒரு முடிவை அரசாங்கம் எடுப்பதென்பது, அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. ஏனென்றால், ஐந. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஒரு உறுப்பு நாடு அல்ல.

அங்கு இலங்கை இப்போது அவதானிப்பு நாடுகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகும், முடிவை கோத்தாபய ராஜபக்ச ஒருவேளை எடுத்தால், அதற்கும் கூட அவர், அமெரிக்காவையே முன்னுதாரணமாக காட்டுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இஸ்ரேல் மீது அநீதியாக செயற்படுகிறது என்று, அமெரிக்காவை பேரவையில் இருந்து விலக்கியிருந்தார் ட்ரம்ப்.
அவரது வழியில் தான், கோத்தாபய ராஜபக்சவும் செயற்படப் போகிறாரா? – அவ்வாறு செய்தால் அது கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் பிரதியாக பார்க்கப்படுவாரே தவிர, அவரது தனித்துவமான முடிவாக கருதப்படாது.

-சுபத்ரா -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22