-கபில்

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன்னொரு நினைவேந்தல் தமிழ் மக்களைக் கடந்து போயிருக்கிறது.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில் கொள்ளும், மே 18 ஆம் திகதியும், தமிழ் மக்களின் ஆன்மாவைப் பிழியும் ஒன்றாக மாறி விட்டது.

போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள் காணப்பட்டன. காலப் போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள், தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறின.

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் காணப்பட்ட பாதுகாப்பு இறுக்க நிலைக்கு மத்தியில், கடந்த ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாக, 2015இற்கு முற்பட்ட காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட அத்தனை நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவேந்தலை நடத்த வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.

கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் இதுபோன்ற நினைவேந்தல்களை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே இருந்து வந்தது. ஆனாலும், கடந்த நொவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு, பெரியளவில் எதிர்ப்பை தெரிவிக்காமல் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டது.

அதுபோலவே தமிழர் தரப்பும், சற்று கட்டுப்பாட்டுடனேயே அந்த நிகழ்வை நடத்தியது. எனினும், முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வுக்கு பெரியளவில் சிக்கல் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இம்முறை கொரோனா தொற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறி விட்டது. மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுமதித்த அரசாங்கம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடமளிப்பதற்கு தயாராக இல்லை என்றே தற்போது தெரிகிறது.

ஏனென்றால், மாவீரர் நாள் என்பது பொதுவான ஒன்று. போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வு. அதன் மீது கை வைக்கின்ற போது, கடும் எதிர்ப்புணர்வுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொறுத்தவரையில் தந்போதைய அரசாங்கம் தமக்கு எதிரான ஒன்றாகவே அதனைப் பார்க்கிறது.

11 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஆட்சியில் இருந்த அரசாங்கமே இப்போது பதவியில் இருக்கிறது. அந்தப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படுகின்றவர்களே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான தலைவர்களாக மாத்திரமன்றி, முக்கியமான பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

போருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த – போரில் நடந்த மீறல் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக, அடையாளப்படுத்தப்பட்ட - கோத்தாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் இப்போதைய அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளில் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், தாம் பதவியில் இருக்கின்ற போதே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தமது முகத்துக்கு நேராக விடுக்கப்படுகின்ற சவாலாகவே அவர்கள் உணருவதாக தெரிகிறது. அதனால் தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றுவதற்கு அனுமதிக்காத வகையில், பொலிசாரையும், இராணுவத்தினரையும் களமிறக்கியிருந்தது அரசாங்கம்.

இந்த நினைவேந்தலை தடுப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்த நிலையிலும், அதனையும் மீறி நிகழ்வுகள் ஆங்காங்கே நடத்தப்பட்டிருந்தன.

நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் உத்தரவுக்கும் முகம் கொடுத்து, பின்னர் அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் நிலையும் ஏற்பட்டது.

நினைவேந்தலைத் தடுப்பதற்கு அரசாங்கம் கொரோனா தொற்றுச் சூழலையும், தனது ஆளணியையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்தியிருந்தது. ஆனால், தமிழர் தரப்பு இந்தச் சூழலை சரியாக கையாளுவதற்கோ, நினைவேந்தலை நடத்துவதற்கோ ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

தமிழர் தரப்பு அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுப் போயிருந்ததானது, இந்த நினைவேந்தல் இன்னும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படாமல் போனதற்கு முக்கிய காரணம் எனலாம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் கட்சிகள் தமது நலன்களை அடைவதற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றன என்றொரு குற்றச்சாட்டு கடந்த காலங்களில், இருந்தது.

எனினும், கடந்த ஓரிரு ஆண்டுகளில், அரசியல் கட்சிகளுக்கு - பிரமுகர்களுக்கு முக்கியத்தும் குறைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படும் நிலை காணப்பட்டது.

ஆனாலும், நெருக்கடியான சூழலில் இதுபோன்ற நினைவேந்தல்களை முன்னின்று செயற்படுவதில் அரசியல் கட்சிகளுக்குத் தான் பலம் அதிகம். நினைவேந்தல் கட்டமைப்பு ஒன்றே நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தாலும், அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தார் இன்னும் வலுவாக செயற்பட்டிருக்க முடியும்.

நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியலுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற போதும், இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில், நிகழ்வுகளை வலுவாக நடத்துவதற்கு, அரசியல் கட்சிகளின் ஆதரவு அவசியம். இந்தமுறை நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாயக்கால் மண்ணில் நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருந்தாலும், ஏனைய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கவில்லை என்பதே உண்மை.

உதாரணத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்களே தவிர, எவ்வாறான முறையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டு முறையை சரியாக கொடுக்கவில்லை. மாவீர்ர் நாள் என்றால், அது எப்படி எந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்றொரு வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

மாலை 6.05 மணிக்கு, மணி யொலி எழுப்பப்படும், அதையடுத்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். மாலை 6.07 மணிக்கு சுடர் ஏற்றப்படும். இந்த வழிகாட்டு முறை எங்கும் எப்போதும் மாற்றப்படுவதில்லை.

முள்ளிவாய்க்கால் நிகழ்வில், காலை 10.30 மணிக்கு சுடர் ஏற்றுவதென ஒரு வழக்கம், அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலையில் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ஆளாளுக்கு ஒரு நேரத்தை முன்மொழிந்து, குழப்பி விட்டனர் என்றே தெரிகிறது.

இந்தமுறை பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாததால், வீடுகளிலேயே நிகழ்வுகளை நடத்துங்கள் என்றே அனைத் தரப்பினரும் கோரியிருந்தனர்.

ஆனால் எந்த நேரத்தில் அதனைச் செய்ய வேண்டும் என்பதை கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க எல்லாத் தரப்பினரும் தவறி விட்டனர்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 18.18.18 என்ற அடிப்படையில், அதாவது, மே 18 ஆம் திகதி, 18 மணி 18 நிமிடத்துக்கு ( மாலை 6.18 மணி) அஞ்சலி செலுத்துமாறு கேட்டிருந்தார்.

தமிழ். அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வெளியிட்ட அறிக்கை, இந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாக இருந்தது. ஆனால் வேறு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றுமாறு கோரி அறிக்கைகளை வெளியிட்டன.

இன்னும் சில தரப்புகள் 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் தீபம் ஏற்றுமாறு கோரின. இந்து மத அமைப்பு ஒன்று ஆலயங்களில் மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பி அதனையடுத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்துமாறு கோரியது.

இவ்வாறான பல்வேறு நேரங்களையும், முன்னிறுத்தி விடுக்கப்பட்ட கோரிக்கைள் சரியாக மக்களை சென்றடையவில்லை. நேரமா முக்கியம், நினைவேந்தல் தான் முக்கியம் என்று கேள்வி எழுப்பக் கூடும்.

ஆனால், நினைவேந்தலை முன்னெடுக்கும் போது ஒரு நிலையான நேரம் வகுக்கப்படுவது அவசியம். “அந்தக் கணம் அவர்களுக்கானது” என்ற உணர்வு இருந்தால் தான், அது நிலையானதாக வலுப்பெறும்.

நொவம்பர் 27 மாலை 6.07 மணி என்பது எவ்வளவுக்கு உணர்வுகளில் ஊறிப் போயிருக்கிறதோ அதுபோலவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான தருணமும் தீர்மானிக்கப்படுவது அவசியம்.

இதனை தீர்மானிப்பதற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லா தரப்புகளும் இணைவது முக்கியம். முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு அடையாளமாக இருக்கப் போகிறது.

அந்த அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு இதுபோன்ற தனித்துவமான அடையாளங்கள் உருவாக்கப்படுவது அவசியம். அடுத்த முறையாவது இதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இறங்குமா?