(செ.தேன்மொழி)


சுகாதார பிரிவும்,  தேர்தல்கள் ஆணையகமும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனுமதி வழங்கினால் தேர்தலை நடத்துவதற்கு நாங்களும் தயாராகவே இருக்கின்றோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெட்வட்குணசேகர, கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் மத்தியில் தேர்தலை நடத்துவதற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.

விரைவில் தேர்தலை நடத்தி தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது எண்ணம் என்றும் அதனால் தேர்தலை விரைவில் நடத்துவது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊகவியளலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், அவர்களை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றியுள்ளது. ஆட்சியை பொறுப்பேற்றவுடனே  குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவலை காண்பித்து தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் இவர்களிடம் எந்த சாதாரண சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளனர். நிதி முகாமைத்துவம் தொடர்பில் வரலாற்றில்  பெயர்பெற்றுள்ள இவர்களின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மக்கள் அறியாது இருப்பதற்கு வாய்ப்பில்லை.  ஏதாவது நிவாரணம் கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே மக்கள் உள்ளனர்.

விவசாயிகளை போசிப்பதாக குறிப்பிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவிட்டு வருகின்றனர். வைரஸ் பரவலினால் போராடி வரும் சுகாதார பிரிவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளையும் இதுவரையில் வழங்காது இருக்கின்றனர். இராணுவத்தினர் விடுமுறையின்றி சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேவேளை பெரும் தொகையான மக்களின் வருமானம் தொடர்பிலும் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளது. இதனூடாக நாடு எதிர்காலத்தில் எவ்வகையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலேயே தேர்தலை நடத்த வேண்டாம் என்று அறிவித்தோம். சுகாதார பிரிவும், தேர்தல்கள் ஆணையகமும் தேர்தலை நடத்த அனுமதித்தால் நாங்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிற்றோம். ராஜபக்ஷாக்களின் ஆறுமாத ஆட்சிகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்  கொடுக்க வேண்டும் என்பதே எமது எண்ணம். அதனால் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.