அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில்,மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘க / பெ ரணசிங்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இன்று காலை பதினோரு மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியானது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜயசேதுபதியும், நடிகை ஐஸ்வர்யா ராஜேசும் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘க / பெ ரணசிங்கம் ’ .

இப்படத்தில் இவர்களைத் தவிர ‘நேர்கொண்ட பார்வை’ படப்புகழ் ரங்கராஜ் பாண்டே, ‘பூ ’ படப்புகழ் ராம், யோகி பாபு, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். மறைந்த குணசித்திர நடிகர் பெரிய கருப்பு தேவரின் வாரிசும், நடிகருமான விருமாண்டி இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தினை ‘அறம்’ படத்தை தயாரித்த கே ஜேஆர் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேசின் கணவராக மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடித்திருப்பதாகவும், புலம்த பெயர்ந்து பணியாற்றும் நிலத்தில் உயிரிழந்த தன்னுடைய கணவரின் சடலத்தை மீட்பதற்காக, கதையின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்தும் உணர்ச்சிமிகு போராட்டம் தான் இப்படத்தின் கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இன்று காலை 11 மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.