ட்ரம்பின் பிடிவாதக் கொள்கையை கோத்தா பின்பற்றுவதால் பயனில்லை - தயான் ஜயத்திலக

24 May, 2020 | 12:55 PM
image

இலங்கை அரசாங்கத்தின் மீதோ, படைகளின் மீதோ விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றதென்றால் உண்மைகளை வெளிப்படுத்தி ஆதரவு நாடுகளின் ஒத்துழைப்புடன் தர்க்க ரீதியாக வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துச் செல்ல முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.  

அவர் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி வருமாறு, 

கேள்வி:-ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணையை கடந்த அரசு வழங்கியதை கடுமையாக விமர்சித்திருந்த நீங்கள் அத்தீர்மானித்தலிருந்து விலகுவதாக தற்போதைய அரசு அறிவித்திருந்ததை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் ஜெனீவா தீர்மானத்திற்கு அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இணை அனுசரணை வழங்ககுவதாக அறிவித்திருந்தார். அதனை நானே முதன் முதலில் எதிர்த்திருந்தேன். காரணம், அவ்வாறு இணை அனுசரணை வழங்குவதன் மூலம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் அனைத்தையும் நாமே இணங்கி ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பானதாக இருந்ததாலேயே கடுமையாக எதிர்த்தேன். 

அவ்வாறு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை தற்போதைய அரசு தன்னிச்சையாக நிராகரித்து அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றது. அதுவும் தவறான அணுகுமுறையாகும். தன்னிச்சையாக வெளியேறுவதற்கு பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும். இதுவே முதற்கட்டமாக செய்திருக்க வேண்டிய நகர்வாக இருக்கின்றது. 

தீர்மானத்தில் திருத்தங்களைச் செய்கின்ற சமகாலத்தில் நாடுகளின் ஆதரவினை பெறுவதற்கு  இலங்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்குமாயின் பெரும்பான்மையான நாடுகள் ஆதரவளித்திருக்கும். இதன் மூலம் இலங்கையின் அபிமானம் சர்வதேச ரீதியில் மேலோங்கியிருக்கும்.  

அவ்வாறு தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இயலாத பட்சத்தில் ஜெனீவா தீர்மானத்திற்கு பதிலான யோசனையொன்றை ஏனைய நாடுகளின் ஆதரவுடன் இலங்கையே முன்மொழிந்திருக்க வேண்டும். முன்மொழிந்த யோசனையை நிறைவேற்றிய பின்னர் அதனை பின்பற்றியிருக்கலாம். அவ்வாறில்லாது  தன்னிச்சையாக ஜெனீவாத் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமை தவறானதாகும். 

தன்னிச்சியான முடிவினை இலங்கை அறிவித்தபோது அதற்கு ஆதரவாக எந்தவொரு நாடுகளும் இருக்கவில்லை. சாதாரணமாக, இலங்கையுடன் இணைந்து செல்லக்கூடிய கொள்கைகளைக் கொண்ட சீனா, கியூபா, ரஷ்யா போன்றநாடுகள் கூட அமைதியாக இருந்துவிட்டன. எமது நாட்டுக்கு எதிராக அவை செயற்படாது என்பதை விடவும் அவை அந்த அறிவிப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

தற்போதைய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் பிடிவாதத்தன்மையின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. கடந்த அரசாங்கம் இலங்கையை மேற்குலக நாடுகளின் “கால்மிதி” போன்றே வைத்திருந்தது. அத்துடன் மேற்குலகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கைப்பொம்மை அரசாகவே இருந்தது. அதுவும் மிகத்தவறான அணுகுமுறையாகும் தற்போதைய அரசாங்கத்துக்கு மேற்குலகத்துடன் அவ்வாறான உறவுகள் காணப்படாத போதும் ஏனைய நாடுகளின் ஆதரவின்றி தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும் தவறானதாகும். 

இந்த விடயத்தில் எமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது கியூபா ஆகும். அமெரிக்கா, கியூபாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடர்களின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கியூபா தன்மீதான பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றும். அதற்கான வாக்கெடுப்பின் போது கியூபாவுக்கு எதிராக 3 வாக்குகளும் ஆதரவாக 190 வாக்குகளும் கிடைக்கும். இவ்வாறான முன் உதாரணங்கள் இருக்கும் போது முறை தவறிய வகையில் அனைத்து கட்டமைப்புக்களையும் உடைத்துக்கெண்டு வெளியேற முயல்வது தவறானதொரு செயற்பாடாகும். 

தன்னிச்சையான செயற்பாடுகளும் முடிவுகளும் நாட்டின் பாதுகாப்பையும் சுயாதீன தன்மையையும் உறுதிப்படுத்துமெனக் கொள்ள முடியாது. நட்பு நாடுகளின் ஆதரவினையும் பேணிக்காக்க வேண்டும். அதற்காக ஏனைய நாடுகளுக்கோ அவற்றின் கோட்பாடுகளுக்கோ கட்டுப்பட்டு அடிபணிந்து தலைகுனிந்து நிற்பதென்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை.

கேள்வி:- இலங்கை படையினரை இலக்கு வைத்து சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்தும் செயற்பட்டால் அதிலிருந்து வெளியேறுவதற்கு தயங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளாரே?

பதில்:- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் நானும், தமரா குணநாயகமும் பணியாற்றியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் அவர் இவ்விடயம் பற்றி தெரிவித்த கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்கு காரணங்கள் இருக்கின்றன. 

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான மேற்குலநாடுகள் ஐ.நாவில் தீர்மானத்தினை கொண்டுவந்தபோது அதற்குரிய மூலோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்து கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவினை பெற்று அதனை நிராகரிக்கும் வகையிலான தீர்மானத்தினை எடுப்பதற்கு வித்திட்ட  ஒரு வதிவிடப்பிரதிநிதியாக நான் இருக்கின்றேன். அப்போதைய அரசாங்கத்திடம் தெளிவான சிந்தனையும் இருந்தது. ஐ.நா.வில் அவ்வாறான வெற்றியொன்றை இலங்கையால் முடிந்திருந்தது. அத்தகைய நிலையிலிருந்த இலங்கை தற்போது படையினரை விமர்சித்தால் ஐ.நா கட்டமைப்பினை தூக்கியெறிந்து விட்டுச் செல்வோம் என்று கூறுவதேன்.

ஐ.நாவின் 47உறுப்பு நாடுகளிடத்தில் விடயங்களை தெளிவுபடுத்துவதன் ஊடாக அவர்களின் ஆதரவினை பெற்று எம்மால் வெற்றியடைய முடியும். இந்த உறுப்புநாடுகளில் ஆசிய பசுபிக், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளே உள்ளன. அந்த நாடுகளின் நிலைப்பாடுகளை நாம் வெற்றி கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது ஐ.நா கட்டமைப்பினை விட்டே வெளியேறுவோம் என்று கூறுவதானது இந்த நாடுகளை வெற்றிகொள்வதற்கான இயலாமையை அல்லது அதற்கான அவசியத்தினை ஏற்றுக்கொள்ளாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இருக்கும் இலங்கை அதன் கொள்கைகளை பின்பற்றி பாதுகாத்த நாடென்ற பெருமையையும்கொண்டுள்ளது. என்போன்றவர்கள் அங்கு உயர்பதவிகளில் நேர்த்தியான பணியாற்றிய கௌரவத்தினையும் கொண்டிருக்கின்றோம். அவ்வாறான நிலையில் ஐ.நா சபையிலாக இருக்கலாம், அல்லது அதன் பிரதான கட்டமைப்புகளிலாக இருக்கலாம் எமது நாட்டுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றதென்றால் அதனை கருத்தியல் ரீதியாக வெற்றி பெறுவதற்குரிய இயலுமையைக் கொண்டிருக்க வேண்டும். 

தவறான கொள்கைகள் அல்லது அணுகுமுறைகள்  மூலம் இலங்கை மீது கறைகள் காணப்படுமாயின் சரியான கொள்கைகளை முன்மொழிந்து புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி அவற்றை போக்க வேண்டும். அதனைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே விமர்சனங்களுக்கு பதிலளிக்காது வெளியேறுவதால் எவ்விதமான நன்மைகளும் இடம்பெறப்போவதில்லை. 

கேள்வி:- உலக அரங்கில் இவ்வாறான வெளியேற்றங்கள் இம்பெற்றிருப்பின் அதற்கான  பிரதிபலிப்புக்கள் எவ்வாறிருக்கின்றன?

பதில்:- உலக அரங்கிலேயே அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் ஐ.நா. கட்டமைப்பிலிருந்து வெளியேறிய வரலாற்றைக் கொண்ட நாடுகளாக இருக்கின்றன. சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகளாக இருக்கின்றன. அவை கூட இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கவில்லை. மேலும் ஐ.நா. கட்டமைப்புக்களிலிருந்து நாடுகள் வெளியேறுவதையும் இந்த நாடுகள் ஆதரிப்பதுமில்லை. விரும்புவதுமில்லை. 

அவ்வாறான நிலையில் இலங்கை வெளியேறும் முடிவினை எடுப்பதானது அவர்களுடனான நட்புறவுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாகவே இருக்கும். மேலும் அடிப்படைவாததினையும், தன்னிச்சையான போக்குகளை பின்பற்றி இத்தகைய தீர்மானங்களை எடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகு போன்றவர்களினது நிலைப்பாடு இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியிடத்திலும் காணப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.

கேள்வி:- நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட தரப்பால் வலியுறுத்தப்படும் பொறுப்புக்கூறல் கேள்விக்குறியாகின்றதல்லவா?

பதில்:- பொறுப்புக்கூறல் விடயத்தில் இரண்டு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் காணப்படுகின்றார்கள். ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை, கட்டமைப்பின் ஊடாக பொறுப்புக்கூறலை வலியுறுத்துகின்றார்கள். இத்தகைய நிலைப்பாட்டில் உள்ளநாட்டில் உள்ள சில தரப்பினரும், மனித உரிமை அமைப்புக்களும், புலம்பெயர் சமுகத்தினரும் காணப்படுகின்றார்கள்.  பிறிதொரு தரப்பினர் சர்வதேச ரீதியான விடயங்களுக்கு மாற்றான முன்மொழிவுகளுடன் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வருகின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு முன்மொழிவுகளைச் செய்துள்ளது. அந்த முன்மொழிவுகளில் போர் நிறைவுக்கு வந்ததோடு இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளடங்களலாக முக்கியமான விடயங்கள் குறிப்பிடப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அந்தச் சம்பவங்கள் தொடர்பிலான பரிந்துரைகளில் சுயாதீன தேசிய விசாரணையொன்று முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.  

அதேபோன்று அவருடைய ஆட்சிக்காலத்திலேயே உதலாகம ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிலும் போரோடு ஒட்டி நடைபெற்ற சம்பவங்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே கணிசமானளவு பொறுப்புக்கூறலை செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான விடயங்கள் துரதிஷ்ட வசமாக முன்னெடுக்கப்படவில்லை. 

அந்நிலையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்று சொற்பகாலத்தில் மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பளித்தமையின் மூலம் பொறுப்புக் கூறல் என்ற சொற்றொடருக்கே இடமளிக்கப்படாது என்பது புலனாகின்றது. அவ்வாறான நிலையில் பொறுப்புகூறல் என்பது தொடர்ந்தும் கேள்க்குறியாகவே இருக்கப்போகின்றது. 

கேள்வி:- பொறுப்புக்கூறல் நடைமுறைச்சாத்தியமற்றுப்போகின்றதா? 

பதில்:- இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச்செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது. தற்போதைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் அமையவுள்ள அரசாங்கங்களுகமாக இருந்தாலும் சரி உதலாகம, கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவமளித்து அவற்றை நடைமுறைப்படுத்தவதன் ஊடாக பொறுப்புக்கூறலைச் செய்ய முடியும். 

அதனைவிடுத்து, எதனையுமே செய்யமுடியாது, பதிலளிக்க முடியாது என்று முன்வைக்கப்படும் அனைத்து விடயங்களையும் நிராகரித்தச் செல்வதானது சர்வதேச ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதற்கான சூழலை இயல்பாகவே உருவாக்கும். அனைத்தையும் நிராகரித்துச் செல்ல முடியாது. 

ஐந்து மாணவர்கள் கடத்தல், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள், இசைப்பிரியா உள்ளட்ட முக்கிய விடயங்கள் பற்றி இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் சுட்டிக்காட்டல்களைச் செய்துள்ளன. பரிந்துரைகளை விடுத்துள்ளன. ஆகவே அவை தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகின்றது. அவற்றை தவிர்த்துச் செல்லதால் நட்பு நாடுகளின் ஆதரவைக் கூட பெறமுடியாது நிலைமை ஏற்படும். 

மிருசுவில் படுகொலை விடயத்தல் சுனில் ரத்நாயக்கவுக்கு தீர்ப்பளித்தன் மூலம் உயர் நீதிமன்றத்தீர்ப்பு புறந்தளப்பட்டுள்ளது. இவ்வாறன முரண்பாட்டினை ஏற்படுத்தும் செயற்பாடுகள் சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கையை வலுப்படுத்துவதாக இருக்கின்றது. 

கேள்வி:- புதிய ஆட்சியில் ஐ.நா.விடயங்கள் தொடர்பில் செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தல் ஏற்றுக்கொள்வீர்களா? 

பதில்:- நான் எப்போதுமே சரியான விடயங்களின் பக்கமே இருக்கும் ஒருவராக இருக்கின்றேன். தற்போதைய சூழலில் ஐ.நா உட்பட சர்வதேச விடயங்களின் தவறான அணுகுமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை தவறு என்பதை ஏற்றுக்கொண்டு புதிய அணுகுமுறைகள் ஊடாக செயற்படுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று நான் கருதவில்லை. மேலும் என்னை அவ்விடயங்களுக்காக அணுகுவார்கள் என்றும் கருதவில்லை. 

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளுக்கும் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபயவின் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கொள்கைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளிகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன. 

உதாரணமாக கூறுவதாயின், நான் ஐ.நாவில்; பணியாற்றியபோது, அவ்விடயங்களை கையாள்வதற்கான கொள்கையொன்று இருந்தது. அக்கொள்கையில்;, விடுதலைப்புலிகளையும் அவர்களின் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது பிரதானமானதாக இருந்தாலும், 13ஆம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. அதனை அடியொற்றியே நான் செயற்பட்டேன். 

ஆனால் தற்போது, அவ்வாறான நிலைமை இல்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தன்னிச்சைவாதத்தினை முன்னிலைப்படுத்தும் பிடிவாத கொள்கையே காணப்படுகின்றது. இக்கொள்கையை பின்பற்றுவதால் முன்னேற்றகரமான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்யப்படுவதற்கு தயாராக இருக்கின்றார்களா? அவ்வாறு இருப்பார்களாயின் நான் இணைந்து நாட்டுக்காக செயற்பட தயாராகவே இருக்கின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க...

2025-02-19 09:53:29
news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58