அரசாங்கம் கடந்த 19 ஆம் திகதி நடத்திய தேசிய படைவீரர் தின விழாவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆற்றிய உரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேச அமைப்புகளுக்கு மிரட்டல் விடும் வகையில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது, இலங்கைக்கே பெரும் ஆபத்தாக அமையும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தியாகங்களை செய்யும் இராணுவத்தினருக்கு தேவையற்ற விதத்தில் அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டேன். அத்தோடு நாட்டுக்கு அநீதி ஏற்படும் விதத்தில் எந்த ஒரு சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதாக இருந்தால் அந்த அமைப்பு, நிறுவனங்களிலிருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி நடந்த தேசிய படை வீரர்கள் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.

இதேபோன்று நாட்டின் பாதுகாப்பு படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் உறுதியான நிலைப்பாடாகும். தமது கொள்கைத் திட்டம் என்ன என்பதனை ஜனாதிபதி போர் வெற்றி தினத்தில் நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாகத் தெரிவித்து விட்டார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு மட்டுமல்ல, ஜனநாயக விழுமியங்களை பாரம்பரியமாக பின்பற்றும் நாடும் கூட, அந்த வகையில் இத்தகைய வீராப்புப் பேச்சுக்களால் உலக நியமங்கள் நடப்புகளை இலங்கை உதறித்தள்ளிவிட முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளத் தவறினால் அதற்கான விலையை செலுத்த வேண்டி வரும் என்றும் தமிழ் தரப்புக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

சர்வதேசத்தை  நாம் தள்ளி வைக்க நினைத்தால், சர்வதேசம் நம்மை தனிமைப் படுத்திவிடும். இவை அனைத்துக்கும் மேலாக வீராப்புப் பேசிய அமெரிக்கா, வரிந்துகட்டிக்கொண்டு வந்த வட கொரியா, சீறிப்பாய்ந்த சீனா அனைத்து நாடுகளுமே கொரோனா என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கிவிட்டன இதுவே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்த ஆசிரியர் தலையங்கம்