உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

ஆனால், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. பிரேசில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 326,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,3,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்திற்கு  அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் இடம்பெறுகின்றது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில்  நேற்று மாத்திரம் 24,197 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 1,645,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை, நேற்று மாத்திரம் 1,299 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்தமாக இதுவரை 97,647 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 53 இலட்சத்தை நெருங்கி வருகிறது. 

இந்த கொடிய கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.