(ஆர்.ராம்)

சில மூலங்களின் அடிப்படையில் எனக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் விடுதலைப்புலிகள் மீள உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் உள்நாட்டில் நடைபெறுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம் தகவல் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் அவ்வாறான முடிவொன்று எடுக்கப்படும் பட்சத்தில் எவ்விதமான நிலமைகள் ஏற்படும் என்பது பற்றியும், பொறுப்புக்கூறலை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எவ்வாறான பதிலளிப்புக்கள் வழங்கப்படலாம் என்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி  தமரா குணநாயகம் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி வருமாறு, 

கேள்வி:- புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளதா?

பதில்:- ஐ.நா.தீர்மானத்திலிருந்து இலங்கை விலகமுடியாது. இலங்கை எவ்வாறு வெளியேறியது என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதிப் பந்தியில் அடுத்த இரண்டு வருடத்திலேயே ஆணையாளர் முழுமையான இறுதி அறிக்கையொன்றை வழங்குவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்த அறிக்கை சமர்ப்பிக்கும் வரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடியானதாகும். 

கேள்வி:- ஐ.நா.தீர்மானத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அரசாங்கம் கடந்த வருடமே அறிவித்து விட்டதல்லவா?

பதில்:- உண்மையிலேயே கடந்த வருட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயம் காணப்படவேயில்லை. இருப்பினும் இலங்கை தரப்பு நேரடியாகச் சென்று தனியானதொரு நிகழ்ச்சி நிரலிலேயே தமது விடயத்தினை வலிந்து உட்புகுத்தி நிலைப்பாடுகளை தெரிவித்தது. அதில் எவ்விதமான நன்மையும் இல்லை. அடுத்த வருடம் மார்ச் மாதத்திலேயே இறுதியான முடிவை இலங்கை எடுக்க வேண்டியுள்ளது. அச்சமயத்தில் மீண்டும் இலங்கை தொடர்பில் தீர்மான வரைவொன்று முன்வைக்கப்படும். அந்த வரைபில் இலங்கை பற்றிய விடயங்களை தொடருவது இல்லாதிருக்கவேண்டும். அவ்வாறில்லாத நிலை காணப்பட்டால் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

கேள்வி:- ஐ.நா.தீர்மானத்திலிருந்து இலங்கை முழுமையாக வெளியேறி விடமுடியுமா?

பதில்:- தீர்மானத்திலிருந்து வெளியேறுவது என்றொருவிடமும் அங்கு இடம்பெறாது. இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டதும் இலங்கை தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி அதனை முடிவுக்கு கொண்டுவர மட்டுமே முடியும். 

அதற்கு ஏனைய நாடுகளின் ஆதரவு அவசியமாகும். அவ்வாறானதொரு முடிவெடுத்தால் ரஷ்யா, சீனா, உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கலாம். இதனைவிடவும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க ஆகியவற்றின் வளர்ந்துவரும் நாடுகளிடத்திலிருந்து ஆதரவு கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

கேள்வி:- தீர்மானத்தினை நிராகரிக்குமளவிற்கு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- 2011ஆம் ஆண்டு எனக்கு இவ்வாறானதொரு அனுபவம் உள்ளது. அமெரிக்கா, கனடா ஊடாக தீர்மானத்தினை சமர்ப்பித்தது. அச்சமயத்தில் ஆசிய,ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து அதனை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். இலங்கைக்காக அந்த நாடுகள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

அப்பிராந்திய நாடுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்கா, இலங்கை உட்பட வளர்முக நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களை எடுப்பதை விரும்புவதில்லை. காரணம், எதிர்காலத்தில் தமக்கு எதிராகவும் அமெரிக்கா அவ்வாறு செய்து தம்மை அடிமைகளாக வைத்திருக்க விளையும் என்ற அச்சம் அந்நாடுகளுக்கு உள்ளது. 

ஆகவே அத்தகைய மனநிலையில் உள்ள நாடுகளிடத்தில் எமது விடயங்களை தெளிவுபடுத்தி அவற்றின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான முறைமையினைப் பின்பற்றியே 2011இல் அந்நாடுகளின் ஆதரவினைப் பெற்றோம்.

தீர்மான வரைவுகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக உத்தியோகப்பூர்வமற்ற கலந்துரையாடலின் போது தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவது வழமையாகும். அச்சமயத்தல் அந்த நாடுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு இலங்கைக்கு ஆதரவளித்திருந்தன. 

இதனால் அமெரிக்காவும், கனடாவும் தீர்மானத்தினை சமர்ப்பித்தாலும் நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தமையால் அதனை மீளப்பெற்றுக்கொண்டன. இவ்வாறு தான் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  

மேலும், இந்த சமயத்தில் அமெரிக்காவினதும். கனடாவினதும் தூதுவர்கள் தீர்மானத்துக்கு  இணை அனுசரணை வழங்க வேண்டும் அல்லது அதனை எதிர்க்க கூடாது என்று மிகக்கடுமையான அழுத்தத்தினையும் என்மீது பிரயோகித்திருந்தார்கள். 

ஆனால் நான் அவற்றுக்கு அடிபணியாது தீர்மானங்களை எடுத்திருந்தேன். அத்துடன் அன்றைய அரசாங்கமும் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக 2015இல் இணை அனுசரணை வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதால் இலங்கைக்கு ஆதரவளித்த ஏனைய நட்பு நாடுகள் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகின. 

கேள்வி:- ஆரம்பத்தில் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தபோதும் தற்போது, படையினருக்கு எதிராக அழுத்தங்கள் தொடர்ந்தால் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களிலிருந்து முழுமையாக வெளியேறத் தயங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய பகிரங்கமாக அறிவித்துள்ளாரே?

பதில்:- ஐ.நா. மற்றும் அதனுடன் கூடிய இதர அமைப்புக்களிலிருந்து விலகுவதை மையப்படுத்தி தான் இவ்வாறான கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன். அவ்வாறானதொரு தீர்மானம் எடுப்பதானது மிகவும் ஆபத்துக்கள் நிறைந்ததாகும். ஐ.நா.வின் ஒட்டுமொத்த உறுப்புரிமையிலிருந்து வெளியேறுவதன் ஊடாகவே அக்கட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற முடியும். 

அவ்வாறு வெளியேறுகின்றமையானது இலங்கை போன்ற வளர்முக வலிமை குறைந்த நாடுகள் தனிமைப்படுத்துவதற்கு வழிசமைக்கும். அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் போது இலங்கை வல்லாதிக்க நாடுகளின் பிடிக்குள் சிக்கிவிடும். அதன்மூலம் அவை கேந்திர முக்கியத்துவத்தில் இருக்கும் இலங்கையை தமது நலன்களுக்காக அதியுச்சமாக பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. 

அத்துடன், இலங்கை மீண்டும் காலனித்துவத்துக்குள்ளாகும் நிலையே ஏற்படும். அணிசேராக் கொள்கையிலிருந்து இலங்கையை விலக்கி நாடுலைவாத கொள்கையை பின்பற்றும் நாடாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகின்றது. அதற்காக இவ்வாறான நிலைப்பாட்டைக் கொள்வதும் மிகத்தவறானதாகும். கொரோனா போன்ற நெருக்கடிகள் காணப்படுகின்றபோது உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டால் நிலைமைகள் மிகவும் மோசமடைந்துவிடும். 

கேள்வி:- ஐ.நா.விலிருந்து வெளியேறும் விடயத்தில் அமெரிக்காவை இலங்கை முன்னுதாரணமாக கொள்கின்றதா? 

பதில்:- அவ்வாறு முன்னுதாரணமாக் கொண்டால் அது மிகத்தவறானதொன்றாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஐ.நா.விலிருந்து விலகினாலும் தனித்து இயங்குவதற்கான சக்தி அதற்கு உள்ளது. ஆனால் இலங்கைக்கு அவ்வாறானதொரு சக்தியில்லை. 

அத்துடன் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஐ.நா போன்ற வரையறுக்கப்பட்ட கொள்கைகளை உடைய கட்டமைப்புக்குள் இருப்பதால் அவர்களது நலன்களை முழுமையாக அடையமுடியாத நிலைமைகள் இருகிக்கின்றன. 

ஐ.நா.வைப் பொறுத்தவரையில் நாடுகளின் இறைமை, சுயாதீனம் உள்ளிட்டவை உறுதிசெய்யப்படுவதோடு பின்பற்றப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. அத்துடன் நாடொன்று பறிதொரு நாட்டில் தலையீடு செய்வதற்கான மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தலையீடு செய்யமுடியும். அடுத்து ஒருநாடு இன்னொரு நாட்டிடம் உதவியைக் கோரினால் தலையீடு செய்யமுடியும். ஆனால் இந்த விடயங்களை பயன்படுத்தி பிறிதொரு நாட்டினுள் அமெரிக்காவினால் நேரடியாகத் தலையீடு செய்ய முடியாதுள்ளது. 

ஆகவே ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கான நிதியை அளித்தல், நிறுத்துதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாகவும் அம்முயற்சிகளை எடுத்தது. அம்முயற்சினள் அமெரிக்காவுக்கு வெற்றியளித்திருக்கவில்லை. 

ஆகவே அமெரிக்கா,போர்கள், அத்துமீறல்கள், இனப்படுகொலை, யுத்தக்குற்றங்கள் போன்றவிடயங்களை முன்னிலைப்படுத்தி மனித உரிமைகளை நிலைநாட்டுவதாக கூறி ஏனைய நாடுகளில் தலையீடுகளைச் செய்ய விளைகின்றது. அதற்கு ஐ.நா கட்டமைப்பினுள் மாற்றங்களை ஏற்படுத்த விளைந்தபோதும் அது வெற்றியளித்திருக்கவில்லை. இதனால் அமெரிக்கா வெளியேறத் தீர்மானித்துள்ளது. 

இதனைப் பின்பற்றி இலங்கை வெளியேறுமாக இருந்தால் சர்வதேசத்தால் நிச்சயம் ஒதுக்கப்படும். அவ்வாறான தருணத்தினை தனக்கு சாதமாக பயன்படுத்தும் அமெரிக்கா, ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தனது நலன்களை அடைவதற்கான முயற்சிகளை கையிலெடுக்கும். தற்போது கூட, எம்.சி.சி. சேபா, எட்கா போன்ற ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் மேலெழவுள்ளனவல்லவா?

கேள்வி:- போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் எந்தவொரு படைவீரர்களையும் விசாரணைக்குட்படுத்தப்போவதில்லை என்று அனைத்து ஆட்சியாளர்களும் கூறுகின்ற நிலையில் உண்மைகள் எவ்வாறு கண்டறியப்படும்? 

பதில்:- விசாரணைகளை யாரும் எதிர்க்கவில்லை. வெளிநாடுகளின் எவ்விதமான தலையீடுகளுமற்ற நிலையில் உள்நாட்டு நீதிப்பொறிமுறைக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே கூறுகின்றார்கள். போர் நடவடிக்கைகளை முன்னெடுத்த படையினர் கொள்கையுடனோ, குறிக்கப்பட்ட நோக்குடனோ போர்க்குற்றங்களிலோ, சட்டமீறல்களிலோ ஈடுபடவில்லை. தனிப்பட்ட ரீதியில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் சர்வதேசத்தின் தலையீட்டை விரும்பவில்லை. 

கேள்வி:- நடைபெற்ற விடயங்கள் குறித்து இதுவரையிலான காலத்தில் எவ்விதமான நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையே?

பதில்:- அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஐ.நா.மனித உரிமைப்பேரவையை தனது மூலோபாயத்திற்கான அஸ்திரமாக பயன்படுத்துகின்றது. அதனைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளுடன் போர் தொடுகின்றது. உதாரணமாக கூறுவதானல், நான் மாணவியாக இருந்தகாலத்தில் வளர்முக நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மனித உரிமைகள் கூட்டத்தொடரில் எந்த நாடுகளின் விடயத்தினை கையிலெடுக்க வேண்டும். அதற்கான செலவீனம் உள்ளிட்டவற்றை அமெரிக்க வழங்க முன்வந்திருக்கின்றது. 

அவ்வாறுதான், இலங்கை கேந்திர ஸ்தானத்தில் உள்ளமையால் அதனை தனது 'பிடிக்குள்' வைத்திருக்க வேண்டுமென்று அமெரிக்கா கருதுகின்றது. அதனடிப்படையில் தான் இலங்கை குறித்த தீர்மானங்களின் பின்னணியில் தொடர்ச்சியாக செயற்படுகின்றது. ஆனால் அமெரிக்கா, தனது நாட்டிலும், ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

தமிழ் மக்கள் உட்பட இந்நாட்டு மக்களுக்கு பிரச்சினைகள் காணப்பட்டால் அதற்கான தீர்வினை பெறுவதற்கு அவர்களே முன்வரவேண்டும். அமைப்பு முறை தவறாக இருந்தால் அதனை மாற்றவேண்டும். அதற்காக தேர்தல்கள் உள்ளன. 

தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து இன தரப்பினருடனும் கூட்டிணைந்து செயற்பட்டால் வெற்றி காணமுடியும். எமது பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளோ, சர்வதே தரப்பினரோ தீர்வளிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வீணான விடயமாகும். எமக்காக நாமே செயற்பட வேண்டும். 

கேள்வி:- தமிழ் மக்கள் தமக்கு நியாயமான நீதியை பெறுவதற்காக சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தினை நாடுவதற்காக எடுத்துள்ள முயற்சிகள் சாத்தியமாகுமா?

பதில்:- சர்வதேச நீதிமன்றுக்கு நாடொன்றை கொண்டுசெல்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதில் இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அம்முறையில் இலங்கையை  நகர்த்த முடியாது. 

இதற்கு அடுத்தபடியாக ஐ.நா.பொதுச்சபைக்கு இலங்கை விடயத்தினைக் கொண்டுவந்து பாதுகாப்புச் சபை ஊடாக நகர்த்த வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியமில்லை. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்த முடியும். 

அதேநேரம் வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா சில சமயங்களில் உதவ முடியும்.  இலங்கையில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கைளுக்கு உதவமுடியும். 

பிரிவினைவாதத்தினை கோரும் புலம்பெயர்ந்தவர்களால் தான் சர்வதே  குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லவேண்டிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. 

ஆகவே அவர்கள் அமெரிக்கா ஊடாகவே இத்தகைய செயற்பாடுகளையும் நகர்த்த விளைவார்கள். அமெரிக்காவும் அவர்களை பயன்படுத்துவதற்கு முனைப்புக் காட்டும இதனால் நன்மையடைப்போவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அல்ல. அமெரிக்காவே தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் இழைக்கப்பட்ட விடயங்களுக்கு பொறுப்புக்கூறுவார்களா?

பதில்:- அதற்கான பதிலை நான் அளிக்க முடியாது. ஆனால் பொறுப்புக்கூறலைச் செய்ய வைப்பதற்கான அணிதிரள்வானது மக்களின் ஊடாக நடைபெற வேண்டும். தாம் ஆணை வழங்கியவர்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் அழுத்தங்களே அதற்கான பதிலை அளிக்கும். 

கேள்வி:- இம்முறை  நினைவேந்தல் நிகழ்விற்கே ஒன்றுகூட முடியாத நிலையில் எவ்வாறு அணிதிரண்டு அழுத்தங்களை ஏற்படுத்த முடியுமென்று கருதுகின்றீர்கள்?

பதில்:- எனக்கு கிடைத்த சில மூலங்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் மீள உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் உள்நாட்டில் நடைபெறுகின்றன. அரச, பெரும்பான்மை தரப்பு மூலங்களிலிருந்து எனக்கு எவ்விதமான தகவல்களும் இது தொடர்பில் கிடைக்கவில்லை. அத்துடன் மீளுருவாக்கச் செயற்பாட்டிற்காக வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான நிதி பரிமாற்றப்படுகின்றது. 

அதற்காக அங்கு(வடக்கில்) சிலர்  செயற்படுகின்றார்கள்.  கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு தடைகள் இருக்கவில்லை. அந்த அரசாங்கத்திற்கு அதுவொரு பிரச்சினையாகவும் இருக்கவில்லை. காரணம் அவர்களின் நோக்கம் வேறாக இருந்தது. 

ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்காது.  ஆகவே அத்தகைய செயற்பாடுகளை தடுப்பது தொடர்பில் ஆழமான கரிசனையைக் தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கும். மீண்டும் போர் உருவாகுதவதற்கு ஆட்சியாளர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

மேலும் கொரோனா விடத்திலும் படையினர் செயற்படுகின்றார்கள். ஆகவே படையினரின் செயற்பாடுகளை முழுமையாக ஆராயாது அதற்கு பதிலளிக்க முடியாது. இருப்பினும் அனைத்து இனக்குழுமங்களையும் உள்ளடக்கிய பொதுவான நோக்கத்தினை அடைவதற்கான அணிதிரள்வு சாத்தியமானதாக இருக்கும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது.