(நெவில் அன்தனி)

கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் பாதுகாப்பாக ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களைக் கொண்ட 16 பக்க ஆவணம் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

கொவிட் - 19 தோற்று நோய் நெருக்கடி காரணமாக தத்தமது நாடுகளில் அமுல்படுத்திய கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் தற்போது தளர்த்த ஆரம்பித்துள்ளன.

இதனை அடுத்து உறுப்பு நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவும்வகையிலேயே ஐ.சி.சி. தனது வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அங்கத்துவ நாடுகளின் மருத்துவ பிரதிநிதிகளுடன் ஐ.சி.சி. மருத்துவ ஆலோசனை குழு நடத்திய கலந்துரையாடல்கதை; தொடர்ந்து தயாரிக்கப்பட்டுள்ள 'ஐ.சி.சி.யின் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான வழிகாட்டல்கள்' (ஐ.சி.சி. பேக் டு கிரிக்கெட் கய்ட்லைன்ஸ்) ஒரு நிறைவான ஆவணமாகும்.

சமூக கிரிக்கெட், உள்ளூர் தொழில்சார் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் ஆகியவற்றை பாதுகாப்பாக ஆரம்பிப்பதற்கு இந்த ஆவணம் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது.

உலகின் ஒவ்வொரு பாகத்திலும் எப்போது கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிக்கலாம் என்பதற்கான விடைகள் இந்த வழிகாட்டல்களில் அடங்கவில்லை.

மாறாக கொவிட் - 19 தொற்று பரவும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் உறுப்பு நாடுகள் எவ்வாறு மீண்டும் கிரிக்கெட்டை ஆரம்பிக்கலாம் என்பதற்கான நடைமுறை பரிந்துரைகளுடனான ஒரு கட்டமைப்பு இந்த வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சகல விடயங்களிலும் மாநில மற்றும் தேசிய அரசாங்கததின் ஒழுங்குவிதிகளுக்கு (எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய ஒன்று) கட்டுப்படும் வகையில் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு இந்த வழிகாட்டல்களை அடிப்படையாகப் பயன்படுத்தி உறுப்பு நாடுகள் சொந்த கொள்கைளைத் தயாரிக்கவேண்டும் என ஐ.சி.சி. ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகும்போது இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகளை இது வழங்குகின்றது என்பது கிரிக்கெட் சமூகத்துக்கு உறுதிப்படுத்தப்படுகின்றது.