(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வெண்ணிக்கை இவ்வாறு 1060 வரை அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் நான்கு பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன் ஒருவர் மலேசியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இந்நிலையில்  இந்த 1060 தொற்றாளர்களில் 598 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும்  உள்ளடங்குகின்றனர்.   இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 610 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் இன்று மட்டும் 16 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.  அந்த 16 பேரில் 13 பேர் கடற்படை வீரர்களாவர்.

அதன்படி இதுவரை 620  தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 250 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் இலங்கையில் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.   428  தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும்   110  பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந் நிலையில்  தொற்று நோய் தடுப்பு பிரிவின் தகவல் படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 578 வீதமனோர் பூரண குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. கொரோனா மரண வீதம் 0.9 வீதமாக உள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்களின் சத வீதம் 41.3 ஆகும்.