(எம்.எப்.எம்.பஸீர்)

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும், விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா இன்று உயர் நீதிமன்றில் கோரினார்.   

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜராகி  அடிப்படை ஆட்சேபங்களை முன்வைத்து வாதிடும் போதே அவர் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த  அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் கோரப்பட்டுள்ள நிவாரணங்கள் சட்ட அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டது என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காது, தள்ளுபடி செய்யுமாறு  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா கோரினார்.

ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும்  வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான  பரிசீலனைகள் நேற்று 5 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.

பிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான  விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிக்ழ்வுகள் மண்டப அறையில் இவை பரிசீலனைக்கு வந்தன.

இந் நிலையில் பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி செயலர் பி.பீ.ஜயசுந்தரவின்  சார்பிலான வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, மேலதிக சொலிசீட்டர் ஜெனரால்   ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா வாதங்களை ஆரம்பித்தார்.

' அரசியலமைப்பின் 126 (2) ஆம் உறுப்புரைக்கு அமைய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று , குறித்த உரிமை மீறல் நிகழும் இடம்பெற்று ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படல் வேண்டும்.

இங்கு  ஜனாதிபதியின்  பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டு, குறித்த கால எல்லை கடந்த பிறகே இந்த  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனால் அம்மனுக்கள் கால வரையறையை கடந்தவை என்பதை அடிப்படை ஆட்சேபணமாக முன்வைக்கின்றேன்.

இங்கு கொரோனா தொற்று பரவலைக் காட்டி  தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியை  வலுவிழக்கச் செய்தல் வேண்டும் என்ற வாதம் கொண்டுவரப்பட்டுள்ளது.   

வேட்புமனுக்கள் கையேற்கப்பட்டதன் பின்னர் , தேர்தலை இடைநிறுத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில்  எவ்வித சட்ட அடிப்படைகளும் காணப்படவில்லை என்பது புலனாகிறது.  ஜனாதிபதி கடந்த மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கும் போது, கொரோனா பரவல் நிலைமை இருக்கவில்லை.

ஒரு தொற்றாளர் கூட இலங்கையில் அப்போது இல்லை. எனினும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் தினமாக அறிவிக்கப்பட்ட மார்ச் 12 ஆம் திகதிக்கு முன்னைய தினமே இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். 

இந்த நிலையில் அதனைக் காரணம் காட்டி ஜனாதிபதியின் வர்த்தமானியை சட்ட வலு அற்றது என கூற முடியாது. ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானிக்கு இன்னும் சட்ட ரீதியிலான வலு, அதிகாரம் உள்ளது.  இது குறித்த விரிவான வாதங்களை எதிர்வரும் செவ்வாயன்று முன் வைக்கின்றேன்.

பொதுத்தேர்தலுக்காக வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட 304 அரசியல் கட்சிகள்  தாக்கல் செய்துள்ளன. அத்துடன்  311 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. 

அப்படியானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் சுயேற்சைக் குழுக்கள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள   7452 வேட்பாளர்களையும் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட வேண்டும் என்கின்ற போதிலும், அவர்கள் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்படாமை மிக பலவீனமான செயல்.மிக முக்கியமானவர்கள் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்படாமை, குறித்த மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு போதுமான விடயங்களாகும்.

சுகாதார துறையினரால், கொரோனா தொற்று குறைவடைந்துள்ளதாக பரிந்துரைக்கப்படாத போது, பொதுத்தேர்தலை நடத்துவது மக்களின் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கும் என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை உறுதி செய்ய  எவ்வித ஆவணங்களையும் மனுதாரர்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை . இவையனைத்தும் நான் முன்வைக்கும் அடிப்படை ஆட்சேபங்கள். இந்த ஆட்சேபனங்களின் அடிப்படையில் இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதே போல் இங்கு இன்னுமொரு விடயத்தை கூறியாக வேண்டும். தேர்தல்கள் ஆணைக் குழு வேட்பு மனுவினை ஏற்க  திகதிகளை குறித்தது. இந் நிலையில் அதில் உள்ள ஒரு உறுப்பினர், இங்கு மன்றில் 17,18,19 ஆம் திகதிகளில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டமையை எதிர்க்கின்றார்.

எனினும் ஆணைக் குழுவின் பெரும்பலானோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு அவர் அந் நாட்களில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அனுமதித்துள்ளார். அவரின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு கவலைக்குறியதாகும். தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான காலப்பகுதி, தேர்தல் நடத்துவதை அறிவிப்பதற்கே தவிர, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காலம் அல்ல. அத்துடன் விடுமுறைகள் கட்டளை சட்டத்துக்கு அமையவோ, பாரளுமன்ற தேர்தல்கள் சட்டத்துக்கு அமையவோ விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள எந்த தடைகளும் இல்லை என்பதே எனது வாதமாகும்.

இந்த மனுக்களின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஜனாதிபதி சார்பில் தான்  மேலதிக வாதங்களை முன் வைக்க எதிர்ப்பார்க்கின்றேன்.  அதன்படி இம்மனுக்களை மீள எதிர்வரும் செவ்வாயன்று  பரிசீலனைக்கு எடுக்குமாரும் அதன் போது அந்த வாதங்களை முன்வைக்க அனுமதிக்குமாரும் கோருகின்றேன்.' என்றார்.

இதற்கு அனுமதியளித்த உயர் நீதிமன்ரம் இன்றைய ஐந்தாம் நாள் பரிசீலனைகளை நிறைவுக்கு கொண்டுவந்து மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் செவ்வாய் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.