இந்தியாவில் ராமநாதபுரம் அருகே திருவாடானை பகுதியில் உள்ள பாக்கு நீரிணை கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு  படகில் கடத்த இருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான  போதைப் பொருள்கள் நேற்று வியாழக்கிழமை இரவு  மீட்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அதிகாரி வருண் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, தேவிபட்டிணம்,திருவாடானை ஆகிய வடக்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில்   சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் இரவு பகலாக ரோந்து பணியால் ஈடுபட்டு  வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு திருவாடணை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அந்த வழியாக வந்த முச்சக்கர வண்டி ஒன்றை சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் நிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி  முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததால் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்தனர்.

இதன் போது முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்திருந்த  போதைப் பொருட்களுடன் செம் மரக்கட்டைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள், எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்தது.

இந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து  போதை பொருட்களை கடத்துவதற்கு மூளையாக செயல் பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்த  முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வருண குமார் கூறுகையில்,

பாக்கு நீரிணை  கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள்கள் அதிகளவில் கடத்தப்பட்டு   வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட பொலிசார்  சார்பாக சிறப்பு படை  அமைத்து கடந்த சில மாதங்களாக போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தோம்.

இந்நிலையில், சிறப்பு குற்றபிரிவு காவலர்களால் போதை பொருட்கள் மற்றும் கடத்தல்கார்கள் சிலர் சிக்கியுள்ளனர்.

விரைவில் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவார் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று   வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சர்வதேச மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் இருக்காலாம்  என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.